அழகழகான புதுச்சேரி! - தி இந்து
மக்கள்தொகைப் பெருக்கம், வளர்ச்சியின் கட்டாயம், பாகப்பிரிவினைகள், வர்த்தக நோக்கு, சுற்றுச்சூழல் மாசுபாடு, பண்பாட்டுச் சின்னங்களைப் பற்றிய புரிதல் இன்மை போன்றவை ஒரு பண்பாட்டு அமைப்பைச் சிதைக்கும் தன்மை கொண்டவை. இதற்கு பலியான நகரங்கள் பல. இந்தப் பட்டியலில் புதுச்சேரியின் கட்டிடக் கலையும் சேர்ந்துவிடுமோ என்ற கவலை ஏற்பட்டிருக்கிறது.
சுவாரசியமான கலப்புக் கலாச்சார வரலாற்றைக் கொண்டது புதுச்சேரி. 1690-களின் தொடக்கத்தில் டச்சுக்காரர்கள் இங்கு வந்தபோது புதுச்சேரி கடலோடிகளின் வசிப்பிடமாக இருந்தது. புதுச்சேரி மேம்பாட்டுக்கான வளர்ச்சித் திட்டத்தையொட்டி, டச்சுக்காரர்கள் ஒரு வரைபடத்தைத் தயார்செய்தனர். நேர்நேரான தெரு அமைப்பைக் கொண்ட நகருக் கான அந்தத் திட்டத்தின்படி, உள்ளூர்த் தமிழர்களைப் பெரிய வாய்க்காலின் மேற்குப் பகுதியில் குடியமர்த்தத் திட்டமிட்டனர். மீண்டும், பிரெஞ்சுக்காரர்கள் வசம் புதுச்சேரி வந்தவுடன் அந்தத் திட்டத்தைப் பின்பற்றி நேர்நேரான சாலைகளை அமைத்திருக்கிறார்கள்.
தமிழ்க் குடியிருப்புகள்
ஆரம்பத்தில் கடற்கரையை ஒட்டியிருந்த அரசு சதுக்கத்தைச் சுற்றி (தற்போதைய பாரதி பூங்காப் பகுதியில்) பிரெஞ்சு நகர் உருவாக்கப்பட்டது. இவ்விடத்தைச் சுற்றிக் கம்பீரமான அரசுக் கட்டிடங்கள் எழுப்பப்பட்டன. இவற்றை அடுத்து, இரு பக்கங்களிலும் அரசு அலுவலகங்களும் வீடுகளும் கொண்ட விரிவான பகுதிகள் வளரத் தொடங்கின. கடற்கரையை ஒட்டிய சாலையானது, சுங்கச்சாவடி, நீதிமன்றம், மேல் முறையீட்டு மன்றம் போன்ற முக்கிய கட்டிடங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. பெரிய வாய்க்கால் - தமிழ்ப் பகுதியையும் பிரெஞ்சுப் பகுதியையும் பிரித்தது. இரண்டு பகுதிகளையும் இணைக்கும் வகையில் இரு பாலங்கள் மட்டுமே இருந்திருக்கின்றன. பிரெஞ்சு அரசாங்கத்தில் பணிபுரிந்தோருக்காக நகரின் வடக்குப் பகுதியில் சிறு தமிழ்க் குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டிருந்தன என்பது தெரிகிறது.
பொதுவாக, பிரெஞ்சுக் கட்டிடச் சுவர்கள் இரண்டடி அகலமும் 14 அடி உயரமும் கொண்டவை. இவை, செங்கற்களால் சுண்ணாம்பு கொண்டு அமைக்கப்பட்டிருக்கின்றன. துத்திப்பட்டு என்னும் இடத்திலுள்ள சுண்ணாம்புக் கற்களிலிருந்தும், கடல் கிளிஞ்சல்களைச் சுட்டும் சுண்ணாம்பைத் தயாரித்துள்ளனர். இத்தகைய சுண்ணாம்பை மணலுடன் கலக்கக் கலவை நிலையங்கள் இருந்துள்ளன. மர வேலைகளுக்கு பர்மா தேக்கு உபயோகிக்கப் பட்டுள்ளது.
தமிழ்ப் பகுதி வீதிகளும் பிரெஞ்சுப் பகுதி வீதிகளும் வேறுவேறான அமைப்புக்களைக் கொண்டவை. பிரெஞ்சுப் பகுதி வீதிகளின் வீடுகள் தனித்தனியாகவும் பெரியதாகவும், உயரமான சுற்றுச்சுவர், திறந்தவெளித் தோட்டம், அலங்காரமான நுழைவு வாயில், வளைவுகளுடன் கூடிய வராந்தா, உயரமான சன்னல்கள், மரத்தாலான பால்கனிகள் ஆகியவற்றைக் கொண்டு அமைந்திருப்பதைக் காணலாம். தமிழ்ப் பகுதித் தெருக்களைப் பொறுத்த வரை, முக்கிய அம்சங்களாக விளங்குபவை வாயில் தாழ்வாரமும் திண்ணையுமே.
முற்றத்தின் முக்கியத்துவம்
வீதியையும் வீட்டையும் இணைக்கும் திண்ணைப் பகுதியிலுள்ள - வேலைப்பாடு மிகுந்த வாசற்கதவைக் கடந்ததும் ஒரு குறுகிய நடைப்பகுதி (ரேழி) வழியே வீட்டின் மையப்பகுதியான முற்றத்தை அடையலாம். முற்றம் பழங்காலத்திலிருந்தே புழக்கத்தில் இருந்து
வரும் ஓர் அமைப்பு. பிரம்மஸ்தானம் என்று அழைக் கப்படும் இந்த இடம், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாசம் எனும் ஐந்து இயற்கைக் கூறு களையும் வீட்டின் மையப் பகுதியுடன் இணைக்க உதவுகிறது. வீடு இயற்கை வெளிச்சத்துடன் காற்றோட்டமான அமைப்புடன் விளங்க இந்த முற்றமே காரணம்.
தொடர்ச்சியான தாழ்வாரங்கள் மற்றும் பிலாஸ்டர், கோர்னேசு, கைப்பிடிச்சுவர் போன்ற பிற அம்சங்களும் இவற்றின் ஒருபடித்தான தன்மையும் தெருவுக்கு ஒரே சீரான அழகை அளிப்பதைக் காண முடியும். தமிழ் வீடுகளில் சமதளக்கூரை, சாய்வான ஓட்டுக்கூரை இரண்டும் கலந்து அமைக்கப்பட்டுள்ளன. இருதளமாக அமைந்த தமிழ் வீடுகளில் கீழ்ப் பகுதி தமிழ்க் கலை அம்சங்களுடனும், மாடிப் பகுதி பிரெஞ்சுக் கலை அம்சங்களுடனும் விளங்குகின்றன.
தனிச்சிறப்பை இழக்கலாமா?
அடுத்தடுத்துள்ள இத்தகைய இரு வேறுபட்ட பாணிகள் ஒன்றை ஒன்று பாதித்ததன் விளைவாக, இங்குள்ள கட்டிடங்கள் இரண்டு கலை அம்சங்களையும் பிரதிபலிக்கும் கூட்டுப் பண்பாட்டு வடிவமாக ‘புதுச்சேரிப் பாணி’ என்கிற ஒரு தனி இலக்கணத்தைக் கொண்டு விளங்குவதைக் காணலாம். புதுச்சேரியின் தனிச்சிறப்பே மாறுபட்ட தமிழ் மற்றும் பிரெஞ்சு அமைப்புக்கள் ஒன்றோடொன்று ஒட்டி அருகருகே அமைந்திருப்பதுதான். எனினும், சமீபகாலமாக புதுச்சேரி தனது தனிச் சிறப்பையும் வித்தியாசமான பிரெஞ்சு-தமிழ் கூட்டுப் பண்பாட்டு அமைப்பையும் வேகமாக இழந்துவருவதுதான் வருத்தமளிக்கிறது.
- மகரந்தன்
தொடர்புக்கு: maharandan@gmail.com