Saturday, December 25, 2010

மகன் "ம" வுக்கு

இணைக்க


மகன் "ம" வுக்கு

ஆகவே -
எங்கும் வெற்றிடம் என்பது
சாத்தியமே இல்லை
இல்லவே இல்லை
எப்போதும் இல்லை;
வெறுமையில் நுழைவதென்பது
சாத்தியமில்லை.
இப்போதும்கூட நீ அதை அறிவாய்
மனதில் நுழைவது முயற்சியால் அடைந்தது
உடலில் நுழைவது சிற்றின்பம்.

நானும்கூட அதை அறிவேன்,
கசக்கிப் பிழியும் சாரத்தில்
வெறுமை துளித்துளியாய் வீழும்
மேலும்,
மனதிலிருந்து, உடம்பிலிருந்து
வெறுமை தப்பித்தோடும்
வெறுமை துப்புறவாகும்
எனது, உனது தலைமேலுள்ள
இருத்தலின் சுமை ஒன்றானது, சமமானது.

இன்று
வெற்றிடத்தில் உன்னையே நிரப்புகிறாய்
நீ போ, இலக்கின்றி சுற்று
தினசரி வேலைகளைக் கவனி
நான் துண்டித்துக்கொள்ள மாட்டேன்
எனவே
நான் உன்னைத் தொடர்வேன்
என்னுள் என்னையும் உன்னையும்
இழக்கும் வரை.

மகனே - ம
இப்போது நீ நேரத்தை வசமாக்கி
அதனோடு ஒன்றுசேர்
இப்போது வெறுமையை ஊடுறுவு
ம - எனது மகனே
உனக்கு நினைவிருக்கிறதா ?
நீ சிறுவனாக இருந்தபோது
உனக்கு கதைகள் சொல்லிருக்கிறேன்
இறகுள்ள தேவதை கதைகள்
அந்த நேரத்தில்
ஆர்வம் தேங்கிய உனது முகம்
என்னைக் கோள்வி கேட்டது
தேவதைக்கு இறகுகள் உண்டா ?
ஆமென்று நான் முனுமுனுத்தேன்
நீ இல்லை என்பதாய் எடுத்துக்கொண்டாய்.

ஆண்டுகள் பல கடந்தன
நீ பெரியவனானாய்
நான் முதுமையில் இருந்தேன்
உனக்கு ஒரு தேவதை கிடைத்தால்
இறுதியாக நான் எனது கதையில்
ஓய்வெடுத்துக்கொண்டேன்.
அந்த தேவதை
இங்கு, அங்கு எங்குமென
நடமாடினாள்
ஒவ்வொருவருக்கும் ஒரு மயிலிறகை
பரிசளித்தபடி.
மகிழ்ச்சி ஒளிந்தது
இரத்த நாளங்கள் அதிர்ந்து இசைத்தன
அனைத்தும் சட்டென்று...
ம - எனது மகனே
அவசர அவசரமாக வீட்டிருந்து பறந்துபோயின
இறகுகள் காற்றில் மிதந்து செல்கின்றன
நான் வார்த்தைகளற்றவனானேன்
நீ பேச்சற்றவனானாய்
நான் சுற்றிலும் வெறித்து நோக்குகிறேன்
நீ இந்த வெளியை வியந்து பார்க்கிறாய்
வீட்டுச் சுவர்கள் பின்புறக்கூரையென எங்கும்
குருட்டு இருட்டு வட்டமாய் சுற்றுகிறது.

மறுபடியும்
உனது மெளனமான கேள்விகள்
என்னை சூழ்கின்றன
என்னை உறைய   வைக்கின்றன.
நான் ஊமையானேன்
அர்த்தமுள்ள சப்தமற்று, பொருளற்று
உன்னை உற்று நோக்குகிறேன்
நானே வெறுமையானேன்
எனது கதைகளின் தேவதையை
அங்கே கண்டுபிடிக்க முயற்சித்து காண்கிறேன்
எனது மகனே - ம.

                                                                   - ப்ரஜீவன் மேத்தா

குஜராத்தி மொழியிலிருந்து
ஆங்கிலத்தில் : திலீப் ஜாவேரி

தமிழில்         : மகரந்தன்


Thursday, December 23, 2010

பயணிகள்

இணைக்க

பயணிகள்

ஒரு சூப்பர் டீலக்ஸ் பேருந்தின்
சக பயணிகளான
நீயும் நானும்
அதிகாலையிலிருந்தே
உன் சன்னலில் நீயும்
என்னுடையதிலிருந்து நானும்
வெளியே பார்த்துக்கொண்டிருக்கிறேம்.


அந்த சிவப்பு சூரியன்
ரோஸ் நிறமாக எனது சன்னலிலிருந்து
மஞ்சளாக மாறி
இப்போது
உன்னிடத்திலிருந்து
கீழிறங்கி வருகிறது.

வா, நண்பா !
நாம் வெளியே செல்வோம்
சூரிய உதயத்தையும்
அஸ்தமனத்தையும் காண்போம்.
என்னிடம் சொல்
நீ யார் ?
எங்கே செல்கிறாய் ?
எங்கிருந்து வருகிறாய் ?
நாம் நமது மெளனத்தை உடைப்போம்.
சூரியன் மறைகிறான்
இது கடவுளின் நேரம்.

ஆனால் -
நீ தான் முதலில் பேசவேண்டும்.
இந்த சூப்பர் டீலெக்ஸ் பேருந்தில்
ஒரு உரையாடல் மட்டும்
நம்மை சிடுசிடுப்பானவர்களாக
வெளிப்படுத்துவிடும்.
சீக்கிரம்
பேச்சைத் தொடங்கு
வெளிச்சம் மங்கிக்கொண்டிருக்கிறது.

                                                                 - ப்ரேம்ஜி ப்ரேம்

ராஜஸ்தானி மொழியிருந்து
ஆங்கிலத்தில் : அருண் சேத்வால்

தமிழில் : மகரந்தன்





Tuesday, December 21, 2010

மாணவன்

இணைக்க
மாணவன்


வெகுநாட்களாக
ஒரு மயிலையும் நான் காணவில்லை
அல்லது
நட்சத்திரங்களின் இசை ஊடே
அலைகளை எண்ணியதில்லை

தெளிவற்ற மனதிற்கு பின்னால்
சென்றுவிட்டன
பெற்றோரின் முகங்கள்
எங்கு நான் சென்றாலும்
கேள்விகள் பல
என்னை உற்று நோக்குகின்றன.

ஒரு மோசமான வலை
என்னை மூடிக்கொண்டு சொல்கிறது
"செய் அல்லது செத்து மடி"
எனது கைகள், உதடுகள்,
மூக்கு மற்றும் காதுகள்
போல்ட்டும் நட்டும் இட்டு
முடுக்கப்பட்டன.
ஓர் உயிருள்ள மீனைப்போல்
ஒரு கொக்கியிலிருந்து
தொங்கிக்கொண்டிருக்கிறேன்.

வெகுநாட்களாக
நான் எனது ஊருக்குச் செல்லவில்லை
அல்லது
எனது காதுமடல்களை அடிக்கடி மகிழ்வூட்டும்
எனது தாத்தாவின் உரையாடல்களை
நான் பகிர்ந்து கொள்ளவில்லை.

காலை நேர நட்சத்திர ஒளியில்
எனது கனவு வெளி
அடிக்கடி காணாமல் போகிறது.
ஒரு கடவுளின் கோபச்சக்கரத்தில்
ஓர் உயிருள்ள பிணம்
துண்டு துண்டாய் கிழிந்து போகிறது;
தன் தலையை உயர்த்தி
குழப்பக் கட்டங்கள், புதிர்களின் நெரிசலின் ஊடே.

                                                           - அஸ்வினி குமார் மிஸ்ரா

ஒரிய மொழியிலிருந்து
ஆங்கிலத்தில் : ரோஹினி காந்தா முகர்ஜி

தமிழில் : மகரந்தன்





Saturday, December 18, 2010

இதயத்திலிருந்து விழிவரை

இணைக்க



இதயத்திலிருந்து விழிவரை
நீர் நிரப்பப்படும்
அதன்பிறகு
நீ ஏரியைக் கண்டடைவாய்.

சீக்கிரம் !
உன்னால் சாலைக்கு வர இயலாது
ஒருமுறை
வானம் நினைவுகளால் மனதை நிறைத்தது.

நதி கொண்டுவந்தது
கானல் நீரின் விலாசத்தை;
காகிதப் படகு சொன்னது
நீந்துவது சாத்தியமென்று.

நான் என்னை ஒரு விளக்காய்
வெளிச்சமாக்கிக்கொண்டால் என்ன ?

நீ ஒரு கடுங்காற்றாய் வீசு !

நான் வாழ்க்கை என்பதை
நீ ஒப்புகொள்ளாவிட்டால்,
மிக நன்று -
ஆனால் அதிலிருந்து வெளியேற்றப்படுவாய்
தவறாக வழி நடத்தப்படுவாய்.

இன்று,
மிகப்பெரிய முயற்சிகளால்
நான் என்னை மூடியிருக்கிறேன்.

இப்போது-
பல ஆண்டுகளுக்குப் பிறகு
நான் என்னை மாய்க்கிறேன்.

ஒரு முத்தைத் துளையிடுவது
உனக்கு சாத்தியமாகலாம்.
ஆனால்,
விரல் நுனியில் படரும்படி
கண்ணீர்த் துளிகளைத் துடைக்க முடியுமா ?

நான் மரிக்கிறேன்
என்னைப் பிடிக்கும் விளையாட்டில்
உன்னால் முடிந்தாலும் என்னைக் காணாதே.

என்னைப் புதைக்கும்முன்
நீ உன்னை மறைத்துக்கொள்.

                   - ரவீந்தர பரேக்
    
    குஜராத்தி மொழியிலிருந்து 
    ஆங்கிலத்தில் : திலீப் ஜாவேரி
          தமிழில் : மகரந்தன்




Saturday, December 11, 2010

சேலத்தில் சங்கரதாஸ் சுவாமிகள் நூல் வெளியீடு

இணைக்க
பேரா. வீ. அரசு தொகுத்து வல்லினம் வெளியீடாக வெளிவந்துள்ள "சங்கரதாஸ் சுவாமிகள் நாடகத் திரட்டு - பதினெட்டு பனுவல்கள்" நூல் நாளை சேலத்தில் வெளியிடப்படுகிறது. தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தமிழ் நாடு இயல் இசை நாடக மன்றம் ஆகியவற்றின் நல்லாதரவுடன் சேலம் மாவட்ட நடிகர் சங்கம் நடத்ததும் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் ௮௮ஆம் ஆண்டு குறு பூஜை விழாவில் இந்நூல் வெளியிடப்படுகிறது. இவ்விழாவில் திரு மகரந்தன் அவர்கள் பங்கேற்று சுவாமிகளின் படத்தினைத் திறந்து வைக்கிறார்.




- வல்லினம்