Thursday, January 10, 2013

இது உங்கள் கதையல்ல

இணைக்க

இது உங்கள் கதையல்ல




எப்போதும் -
தவளையாக மாற
எண்ணம் கொண்டிருக்கும்
தெருநாய் ஒன்று
இங்கு படுத்திருக்கிறது.

நாயாகக் குரைப்பதில்
துளியும் விருப்பமில்லை.
தவளையாய்
குட்டையில் ஊறவும்
விருப்பமில்லை.

என்றாலும்-
தவளைபோல்
குரலெழுப்பிக்கொண்டே
படுத்திருக்கிறது
அந்த மனநாய்.

                               - மகரந்தன்

Wednesday, January 9, 2013

மரங்களின் மரணம்

இணைக்க






மீண்டும் அவர்கள் வந்திருக்கிறார்கள்
கையில் ஒரு பட்டியலோடு.
அதில் என் பெயரும் இருக்கிறது
இம்முறை-
அவர்களோடு போகவே
விருப்பப்படுகிறேன்.

பணக்கார பயணிகள்
வந்து போகுமிடம்;
என் வசிப்பிடம்.

இங்கு-
ஒரு சமயம்
உயரமாக வளர்ந்த
அடர்ந்த பசுங்காடுகள் இருந்தன.

மலை முகடுகளிலும்
ஆற்றின் திவளைகளிலும்
யானைத் தந்தத்தின் நிறத்தில் 
விரிந்து கிடக்கும் மணற் செதில்களில்
மின்னும் சூரிய ஒளியில்
ஓர் ஆன்மீக அமைதி தவழும்.

பரிசுத்தமான
தென்றலின் ஆட்சி
இங்கு குடிகொண்டிருக்கும்.

அருகில் இருந்த நகரம்
சிறியதாய் இருந்தபோது
சில மரம் வெட்டிகள் வந்து போனார்கள்.
பின்னும் 
பலமுறை வந்தார்கள்
நகரம் பெருநகரமாகிவிட்டது.

விலைமதிப்பற்ற மரங்களுக்காக
இப்போது-
மீண்டும் வந்திருக்கிறார்கள்;
கையில் ஒரு பட்டியலோடு.
அதில் என் பெயரும் இருக்கிறது.

இம்முறை-
அவர்களோடு பயணிக்கவே விரும்புகிறேன்.
எனக்கு முன்னால்
இங்கிருந்து குடிபெயர்ந்த
சக நண்பர்களைக் காண
ஆவலாய் இருக்கிறது.

இனி இங்கே-
மலைகளும் ஆறுகளும்
மணல் திட்டுகளும் இருக்கலாம்.

ஆனால்-
பருத்து திமிர்த்த அந்த கறுத்த மரம். . .
நெஞ்சை நிமிர்த்தி வீராப்பு பேசும்
அந்த தேக்கு மரம். . . 
காற்றுக்கு வாசனை பூசிவிடும்
அந்த சந்தன மரம்....
ஆற்று நீரில் அடிக்கடி முகம் பார்க்கும்
அந்த ரோஸ் மரம்.....

இன்னும்.... இன்னும்...
அந்த பரிசுத்த தென்றலின் ஆட்சி...... ?


                                               - மகரந்தன்

Tuesday, January 8, 2013

உன் ஆழ்மனத்தினுள் ஒரு நாள்

இணைக்க


உன் ஆழ்மனத்தினுள்
ஒரு நாளைக் கழிக்க விரும்புகிறேன்.

நான் -
என்ன கண்டுபிடிக்கப் போகிறேன் என்று
யாருக்குத் தெரியும் ?

உனது பிரகாசமான எதிர்காலத்தையா
உனது இரகசிய அச்சத்தையா
உனது இருட்டு ஆசைகளையா
உனது பயங்கர கனவுகளையா
அல்லது
உனது சிரிப்பின் பின்னால் ஒளிந்திருக்கும்
உனது கோரமுகத்தையா ?

அநேகமாய்
என்னிடமிருந்து நீ திருடிய
ஒரு கருப்பொருளை மீட்டெடுக்கலாம்
அல்லது
உன் ஆழ்மன எண்ணங்களில்
சில அம்பலப்படலாம்.

இவற்றையெல்லாம்விட
ஆண்டு முழுவதும்
என்னைப்பற்றி
உண்மையிலேயே நினைத்தது என்ன
என்பதைப் பற்றி
தெரிந்துகொள்ளலாம்.

ஆகவே - 
உன் ஆழ்மனத்தினுள்
ஒரு நாளைக் கழிக்க விரும்புகிறேன்
என் எதிர்காலத்தைத் திட்டமிட.

- மகரந்தன்.

Monday, January 7, 2013

முதுகெலும்பற்றவன்

இணைக்க
தானாகவே மூளை சுவாசிக்க
தானாகவே இதயம் துடிக்க
துடுப்பு இல்லாமல் நீந்துகிறேன்.

எல்லை கடந்து
இலக்கு இன்றி
நடந்து கொண்டிருக்கிறேன்
ஒரு பேரழிவின் நடுவில்.

ஒரு பூனையின்
கூரிய நகமுனையில் சிக்கிய
நூல் கண்டைப்போல
ஒரு கட்டுக்கதையின்
கூர் வெளிச்ச முனையில்
சிக்குண்டு கிடக்கிறது எதிர்காலம்.

உள்வாங்கிய வயிற்றில்
வலியின் மிச்சம்
இன்னும் இருக்கிறது.

தலை சுற்றுகிறது
மூளை வேலைசெய்வதால்.

வாழ்வின் எச்சம்
குப்பையில் வீழ்கிறது.

முதுகெலும்பை அழுத்திக்கொண்டு
முதுகின்மீது-
ஒரு கரடி உட்கார்ந்திருப்பது போல் உணர்வு.

முதுகெலும்பா. . . ?
அதுதான் எனக்கில்லையே !

                                                                    - மகரந்தன்

Sunday, January 6, 2013

துரோகத்திற்கு முந்து

இணைக்க
. . . ஆகவே
துரோகத்திற்கு முந்திக்கொள்.

இருவருக்கும் இடையிலிருப்பது
நட்புறவு இல்லை.
அது ஒரு
குரு-சிஷ்யன் உறவு.

நீ உணர்த்தும் வலி
அவன் விளங்கிக்கொள்ளும் பாடம்.
உன் நடிப்பே கொலைவாள்
நீ பின்னும் சூழ்ச்சியே
கொலைக்களம்.

உனது அதீத கற்பனைகளின் ஏவல்
அவனைச் சூழும் தரித்திரம்.

நீ குடிக்கும் மதுவும்
புகைக்கும் சிகரெட்டின் தீக்குச்சியும்
நீ புணரும் யோனியும்
அவன்தான்.

வாழ்வின் நோய்
கடைசியில்-
என்ன கொண்டு வந்து சேர்த்துவிடப் போகிறது ?

ஆகவே-
துரோகத்திற்கு முந்து
இருவருக்கும்
வாரிசுகள் உள்ளன.

- மகரந்தன்.