Monday, December 28, 2009

படுக்கையில் கிடக்கும் நாற்காலியின் நாவு

இணைக்க
ஓயாது ஓடி 
நாட்களைக் கடத்தும் 
கடிகாரக் கரணம் 
நின்றுபோகக்கடவது.  


சுயசரிதம் எழுதியபடி 
ஆடும் நாற்காலியின்கீழ் 
சூக்குமம் துறந்து 
ஸ்தூலமாகி 
சலனத்தைப் பெருக்கும் 
பொதுப்புத்தியின் 
அடையாளம் காணாத காத்திருப்புகள்.  
நிறமிழந்து அலையும் 
போதையூட்டும் 
சாம்ராஜ்யங்களின் அசிரத்தையால் 
பற்களை இழந்து 
மூத்திரச் சகதியில் 
நெளிந்தபடியே ஊரும் 
சலித்த புன்னகைகள்.  


ஆர்ப்பரித்து அடங்கும் நீலம் 
குதூகளிக்கும் பச்சை 
ஆரூடம் சொல்லும் மஞ்சள் 
நியாயம் பேசும் சிவப்பு 
எதையும் ஏற்கும் வெள்ளை 
சூன்யம் முளைக்கும் கருப்பு  


வண்ணங்களால் 
வண்ணங்களாய் ஒன்றாது 
ஓயாது ஓடி 
நாட்களைக் கடத்தும் 
காலப்பிரக்ஞையற்ற 
கடிகாரக்கரணம் 
நின்றுபோகக்கடவது.  
 
- மகரந்தன்