Thursday, July 10, 2008

கனவுகள் கலையட்டும்

இணைக்க

அம்மா. . .
அன்று பாடிய தாலாட்டை
இன்றும் பாடு!

என்
கணங்களின் யுகங்களை
கனவுத் தூளியில்
தூங்கச் செய்த
அந்தத் தாலாட்டை
இன்றும் பாடு !

வாரணமாயிரம் சூழ
இந்திரன் போலொரு
இராஜகுமாரன் வந்தென்
கைத்தலம் பற்றுவான்;

வைரமணி மாலைகள் வீழ
முத்துப்பந்தலின் கீழ்
என் திருமணம் நிகழும்;

கைகள் சிவக்க
தந்தையும் தமையனும்
வரிசைகள் வழங்க
ஊர் மக்கள் வாழ்த்தொலி
விண்ணைப் பிளக்கும்;

என் தாலிக்கு சீர் சேர்க்க
வெள்ளிமணி பூட்டிய வண்டியில்
வண்டி நிறைய சீர்களோடு
தாய்மாமன் வருவான்;
என் குழந்தைக்குத்
தங்கத்தில் தொட்டில் தருவான்
என்றெல்லாம் பாடினாயே. . .

உன் பாட்டில் கேட்டதைப் போல்
இந்தப் பிரபஞ்சத்தில் எங்கும்
நான் கண்டதில்லையே அம்மா . . .

அந்தப் பிஞ்சு வயதில்
என் கண்களுக்கு
கனவுகளை மட்டுமே
சொல்லிக்கொடுத்துவிட்டாயே !


இன்று. . .
முதிர்கன்னி என்கிறார்கள்.
கண்ணீர் கோடுகள்
சிறைக் கம்பிகளாகிவிட்டன.
உடலைப்போலவே
உள்ளமும் சோர்ந்துவிட்டது.

அம்மா. . .
அன்று பாடிய தாலாட்டை
இன்றும் பாடு !

ஆனால் . . .
இன்னொரு தலைமுறையை
கனவுகளிலேயே
காலந்தள்ள விடாமல்
நீ வாழ்ந்ததைப் பாடு !
எதார்த்த வாழ்க்கையைப் பாடு !

- மகரந்தன்

அது ஒரு புனிதப் பொழுது

இணைக்க
அது ஒரு புனிதப் பொழுது

சூரியன்
பொழுதின் மடியில்
தலை சாய்கிறான்
நான் உன் மடியில்
தலை வைத்திருக்கிறேன்.

வானம்
தேசத்தின் நெருக்கடி நிலையை
நினைவூட்டுகிறது.
"மழை வருமா?" என்கிறேன் நான்.
"சாரலே அடிக்கிறது" என்கிறாய்
ஆம்!
உன் கண்களில் மின்னல்.

நிர்வாணத்தைக்
குடைகளாக்குகின்றோம்
நம்முள்
மழையடித்து ஓய்கிறது.

அந்த அந்திக்கும்
வெட்கம் போலும்
இருட்டு முக்காட்டை
இழுத்துப் போர்த்திக்கொள்கிறது.

அது ஒரு புனிதப் பொழுது.

- மகரந்தன்.

கறுப்பு

இணைக்க

உன் தோலும்
என் தோலும்
ஒரே நிறம்தான்
"கறுப்பு"

உன் தொழிலும்
என் தொழிலும்
ஒரே மாதிரிதான்
"அடிமைத் தொழில்"

உன் ஊருக்கும்
என் ஊருக்கும்
ஒரே வித்தியாசம்தான்
"பறைச் சேரி"
"பள்ளிச் சேரி"

தின்ன இலையில்
பீ பேணவன் நீ என்றால்
அதற்கும் அஞ்சி
நகர்ந்து உட்கார்ந்தவன்
நான்

நகர்ந்து உட்கார்ந்தவனை
அழித்தொழிப்பேன் என்றால்
அதையே
தின்னக் கொடுத்தவனை
என்ன செய்வாய்?

காற்றுக்கும் தெரியாமல்
கழுவிக் கொள்வாயோ?

- மகரந்தன்

Saturday, July 5, 2008

நிழல்கள்

இணைக்க
ஓயாது வந்துபோகும்
இந்தக் கொடுங்கனவிலிருந்து
எப்படித் தப்புவது?

- இங்கே
நிழல்களின் நிலத்தில்
நடந்து கொண்டிருக்கிறேன்.
இங்கே அங்கேயென
ஏகப்பட்ட குரல்கள்
உருவமற்று.

என் குரலை மட்டும்
ஒருவரும் செவிமடுக்கவில்லை.
அந்தக் குரல்கள் மட்டும்
அத்தனை விளக்கமாய்
எனக்குக் கேட்கின்றன.
என் குரல் மட்டும் எவருக்கும்
எட்டவில்லையே !

பழகிய
அதன் பெயரையும் சொல்லித்தான்
ஓலமிட்டு அழைக்கிறேன்.

பிறகு -
நினைவுகளனைத்தும்
பின்னோக்கி நகர . . . நகர. .
மூளையின் பெருவலி
குரல்களின் சத்தத்தை
அதிகப்படுத்திக் கொண்டே
இருக்கிறது.

நிஜங்களைத் தொலைத்த
கொடுங்குரல்களின் ஊடாக
உண்மையைக் காண எங்கே போவேன்?
எப்படிக் காண்பேன்?

தேடித்தேடித் தீர்ந்த பின்னர்
இங்கே
மறுபடியும்
நிழல்களின் நிலத்தில்
நடந்து கொண்டிருக்கிறேன்
போகும் வழிதெரியாது.

அனைத்துக் குரல்களும்
ஆள் பிடிக்கும் ஆசையில்
தனித்தனியாய் அலைந்து கொண்டிருக்கின்றன
எந்த ஒரு பிடிப்புமின்றி.

- மகரந்தன்

Tuesday, July 1, 2008

முரண்களின் உயிர்ப்பு

இணைக்க
இன்று காலை
அவளைப் பார்த்தேன்

பனியில் குளித்த
அதிகாலை ரோஜாச் செடிபோல்
இருந்தாள்.

அவள் வெட்கத்தோடும்
புன்னகையோடும்
என்னைப் பார்த்தாள்.
அவளின் நேர்கொண்ட நோக்கு
நேர்மையானது.

அவள் ஒற்றைக் கூந்தலில்இருந்த ரோஜா
கீழே வீழ்ந்தது.

சட்டென அதை
எடுக்கக் குனிந்தபோதுதான்
கவனித்தேன்
அவளுக்கு ஒரு கால் இல்லை.
கட்டைக் கால்.

என்னைக்
கடக்கும்போது
அழியாத அந்தப் புன்னகையை
உதிர்த்துப் போனாள்.
அது அர்த்தமுள்ளது.

பெருங்குரலெத்து
நான் புலம்பித் தீர்க்கும்போதெல்லாம்
ஓ. . . என் பேரண்டமே !
என்னை மன்னித்துவிடு
எனக்கு இரண்டு கால்கள் உள்ளன.
உலகம் என்னுடையது.


பூங்கொத்து வாங்க
நின்றேன்.

கடைக்கார இளைஞன்
வசீகரமானவனாக இருந்தான்.
அவனது புன்னகை
தன்னம்பிக்கைக்கு புதிய முகவரி.

"நீங்கள் சற்று தாமதமாய் வந்திருந்தால்
உங்கள் பொல்லாப்புக்கு
ஆளாகியிருப்பேன்.
இதுதான் கடைசி"
என்று தந்தான்.
அவன் வார்த்தைகளில்
மாய வித்தை இருந்தது.
இன்னும் கொஞ்ச நேரம்
பேசிக்கொண்டிருக்கலாம் என்றும்
யாருக்கும் தோன்றும்.


"நன்றி" சொல்லி
நகரும் போது
"நான்தான் உங்களுக்கு
நன்றி சொல்ல வேண்டும்.
உங்களைப் போன்றவர்களோடு
பேசுவதே எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
பாருங்கள்
நான் பார்வையற்றவன்"

நெடுங்குரலெடுத்து
நான் ஏங்கியழும்போது
ஓ. . . என் பேரண்டமே !
என்னை மன்னித்துவிடு
எனக்கு இரண்டு கண்கள் உள்ளன.
உலகம் என்னுடையது.

வீதியில் இறங்கி
நடந்து கொண்டிருந்தபோது
நீலக்கண்களோடு
ஒரு சிறுவனைக் கண்டேன்.

அவன்
பிற சிறுவர்கள் விளையாடுவதை
வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஒரு நிமிடம் நின்று
அவனிடம் கேட்டேன்
"நீ ஏன் அவர்களோடு சேர்ந்து
விளையாடக்கூடாது"

ஒரு வார்த்தையுமின்றி
அவன்
அங்கேயே பார்த்துக் கொண்டிருந்தான்
பிறகுதான் தெரிந்தது
அவனால்
"கேட்க இயலாது" என்று.
கேட்க இயலாதபோதும்
அவன் பார்வையில்
ஆழ்ந்த தெளிவு இருந்தது.

கனத்த குரலெடுத்து கண்ணீர் விட்டு
குறைகளைச் சொல்லி
நான் அழும்போதெல்லாம்
ஓ. . . என் பேரண்டமே !
என்னை மன்னித்துவிடு
எனக்கு இரண்டு காதுகள் உள்ளன.
உலகம் என்னுடையது.

முரண்களில் உயிர்க்கிறது வாழ்க்கை.

- மகரந்தன்