Saturday, June 28, 2008

குருதியில் உறையும் வார்த்தை

இணைக்க
நான் பேசத்தொடங்கினேன்.
முன்னேயிருந்தவர்களின்
வார்த்தைகளை நிராகரித்தது போலவே
யாரும் கேட்கவேயில்லை.

புரிந்துகொள்வதற்கு
முயற்சிக்காமல்கூட
அவர்கள் இருந்திருக்கலாம்.

அல்லது
புரியாமல்கூட
இருந்திருக்கலாம்.

அல்லது
அவர்கள் கேட்பதற்கு
வேண்டிய சப்தம்
எனது வார்த்தைகளில்
இல்லாது இருந்திருக்கலாம்.

எனது கூர்மென்கத்தி
பேசத்தொடங்கியது.

எனது
ஒவ்வொரு வார்த்தையையும்
சன்னமான சப்தத்தையும்
சிறு அசைவையும்
மெல்லிய கூச்சலையும்
இங்கே அவர்கள்
மிகத் தெளிவாகக்
கேட்கத்தொடங்கினர்.

இப்போதெல்லாம்
எனது கத்தியின் சிறு படபடப்பைக்கூட
என்னைவிட மிக விரிவாக
புரிந்துகொள்கின்றனர்:
அது மேற்கொள்ளும்
சவாரியைக்கூட.

எனவே
நானும் இப்போதெல்லாம்
கத்தி வழியே பேசுகிறேன்.
எனது கத்தி
எனக்காகப் பேசுகிறது
சத்தமாக, தெளிவாக.

நான்
ஒவ்வொன்றைப் பற்றியும் பேச
பேராசை கொள்கிறேன்.

குருதியின் ஊடாக,
கண்ணீரின் வழியாக
நான் பேசும்போது
வார்த்தைகளைத் தனியாக்கி
எனது கத்தி
என்னைக் கவனிக்கும்.
பிறகு ...
தகவலைப் பரிமாறும்.

ஏனென்றால்
அது...
அதன் பேச்சை
யார் கேட்கவிரும்புகிறார்களோ
அவர்களுக்கானதாக மாறியிருக்கும்.

- மகரந்தன்

Friday, June 27, 2008

நீ காதலிக்கிறாய் என்றால் . .

இணைக்க
நீ
என்னைக் காதலிக்கிறாய் என்றால்
நீ ஏன் என்னை அழைக்கக் கூடாது ?
எப்போதும் உன்னை
கைப்பேசியில் அழைப்பது
நானாகத்தான் இருக்க வேண்டுமா ?

நீ
என்னைக் காதலிக்கிறாய் என்றால்
பிறகு நீ ஏன் என் கைகளைப்
பற்றிக்கொள்ளக் கூடாது;
நாம் வெளியே போகும் போதெல்லாம் ?

நீ
என்னைக் காதலிக்கிறாய் என்றால்
பிறகு ஏன் மன்னிப்பு கேட்கிறாய்
என்னைச் சந்திப்பதைத் தவிர்த்துவிட்டு.

நீ
என்னைக் காதலிக்கிறாய் என்றால்
அருகில் செல்லும்
அழகானப் பெண்களைக் காணும்போதெல்லாம்
என் எதிரிலேயே
உன் கண்களில் ஏன்
காமம் கசிகிறது.

நீ
என்னைக் காதலிக்கிறாய் என்றால்
என்னை ஏன் அடிமைப்படுத்த
எண்ணுகிறாய்?
நான் மாறவேண்டும் என்று
ஏன் நிர்பந்திக்கிறாய்?

ஏனென்றால். . . .
நீ
என்னைக் காதலிக்கவே இல்லை.
ஆனால்
அதை சொல்லத் தைரியமற்று தயங்குகிறாய்.

நீ தயங்குவதைக் கண்டு
என் மனம் புண்படுகிறது.

நான்
உண்மையை ஏற்றுக்கொள்வதைத் தவிர
ஆச்சரியப்பட ஒன்றுமேயில்லை.

நீ
என்னைக் காதலிக்கிறாய் என்றால்.

- மகரந்தன்