Saturday, March 6, 2010

ஒரு மொந்தைக் கள்ளும் கொஞ்சம் கோழிக்கறியும்

இணைக்க
ஒரு மொந்தைக் கள்ளும்
கொஞ்சம் கோழிக்கறியும் 

கேள்விக்குறிகளால் 
கேள்விக்குறிகளால் 
நிரப்பப்பட்டிருக்கிறது 
அரங்கமேடை.

வெறிபிடித்த யோனியை 
வேட்டைக்கு அழைக்கும்
உடல்மொழி பீறிடும் ஓரங்கம் 
தெளிவற்று அசைகிறது.

கால மாத்திரைகளின்
கனவிலும் செலவிலும் 
மறைமுகமானது 
நிருத்தம், நிருத்தியம்.

கேள்விக்குறிகளை ஒத்த 
கோமாளிகளின் வலி
நாலுகால் கிடக்கைகளின் 
இதயத்தை ஈர்க்கவில்லைபோலும்.

குவிமைய விளக்குகளின்
வெளிச்சத்தில் 
உணர்ச்சியற்று கிடக்கின்றன 
உணர்ச்சிக்குறிகள்.

வேட்கைகளை 
வெளியேற்றித் தணியா 
அடல்மொழிகளின் வெளியேற்றம் 
"பொட்டப்பயலே... போடா...
குத்துற குத்துல 
கொட்டப் பிதுங்கிடும்" 

மேற்கோள்கள்
உதாரணங்கள் 
உபதேசங்கள் எதுவும் 
சமன்பாட்டை நோக்கி 
நீளவில்லையென 
மர்மங்கள் நிறைந்தத் தேடலின் 
ஒரு பகுதியாக 
அறிவிப்புகள் 
வெளிநடப்புகள்
அத்துமீறும் கோஷங்களின் 
நடுச்சாலை ஆர்ப்பாட்டங்கள்.

அந்தந்த நிமிடத்தை 
முடிவு செய்கிறது 
இயக்க விதியை 
இயக்கும் சப்தங்கள். 

வெளிப்பட்டுத் தோன்றா 
உயிராட்டத்தில் 
புகலிடம் தேடி 
அரங்கமெங்கும் அலைகின்றன 
கேள்விக்குறிகள்.

கசிகிறது 
ஆங்கங்கே நிற்கும் 
கங்காணிகளின் ரகசியப் பேச்சு 
உருபெருக்கி ஊடாக
". . . கழுதைமேல ஏறித்தான் என்னா சொகம்
எறங்கித்தான் என்னா சொகம் ?"

". . . வெஷத்த வெச்சித்தான் 
கொல்லனும்னு இல்ல 
வெல்லத்த வேச்செக்குட 
கொன்னுப்புடலாம் " 

சப்தங்களைத் தின்று 
ஈகோவில் இயங்கும் 
உலகிற்குள் பிரவேசிக்க 
பார்வையாளர்களே 
தினசரி வாருங்கள்.

- இன்னும் 
மிச்சமிருக்கின்றன 
இருக்கைகளும் 
கேள்விக்குறிகளும். 
 
- மகரந்தன்