Saturday, May 22, 2010

பலவீனத்தின் அங்கமான ஒரு வெற்றி

இணைக்க
பலவீனத்தின்  அங்கமான  ஒரு வெற்றி 


எப்போது யாரால் 
கசையடி கிடைக்கும் 
யூகிக்க முடியாத 
ஒவ்வொரு தருணத்திலும் 
வந்து போகிறார்கள் 
யாரேனும் இரண்டு அடிமைகள்.


அடிமைகளை அடக்குவது
மிகப்பெரிய பாரம்.
அடித்து உதைக்காவிட்டால் 
கேவலமாக திட்டவாவது வேண்டும்
மன அழுத்தத்திலிருந்து 
மீளமுடியாத அளவிற்கு. 


இளம் அடிமைகள் 
முரடர்கள் 
மிரண்டு ஓடும் காளைகளை
இழுத்துப்பிடித்து வண்டியில் பூட்டும் 
லாவகம் வேண்டும்.


தீர்மானம் போடுவார்கள்
அதிபயங்கரமாய் 
அதிகாலைக் கனவில் வந்து 
கலக்கமூட்டுவார்கள்
சில சமயம்
பீறிட்டு அழுது 
எதிராளியின் கண்ணீரை
காவு கொள்வார்கள்.


எப்படியாகினும்
கேள்விகளையும்
எதிர்கேள்விகளையும்
அவர்களிடத்திலேயே விட்டுவைப்பது நல்லது 
காரணம் கிடைக்காமல்
அகப்பட்டுக்கொள்ளும் சந்தர்ப்பங்களில்
பதிலையும் கேள்வியாகவே 
கேட்டுவைப்பதே நல்லது.


அடிமையாவது இருக்கட்டும்
அடிமை தன்னை மேலும் 
அடிமையாக்கிக் கொள்வதே 
அதிமுக்கியம்.


வெட்டியாய் பேச்சு 
என்ன வேண்டிக்கிடக்கிறது 
எனக்கு வேலைகிடக்கிறது.


அதுசரி. . . 
கசையடி
என்மீது விழுந்தால் 
தழும்பு 
உங்கள் மீதிருந்து 
ஏன் எழவேண்டும் ?


- மகரந்தன் 









No comments: