Saturday, June 12, 2010

காலத்தை வழிநடத்துகிற எழுத்துக்கள்

இணைக்க
படைப்புக்கும் படைப்பாளிக்கும் இடைவெளியில்லாத எழுத்துக்கள் காலத்தையே வழிநடத்துகிற எழுத்துக்கள்

 சாகித்ய அகாதெமி நிகழ்ச்சியில் மகரந்தன் ஆற்றிய நன்றி உரை- தமிழில் 



எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், அரசு அதிகாரி என பன்முகங்கொண்ட மாலத்தீவு எழுத்தாளர் திரு. இப்ராகிம் வஹீத் அவர்களே,

அவரைப் போலவே, எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பத்தி எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்டவரும், சாகித்ய அகாடெமியின் பொதுக்குழு உறுப்பினருமான எனதருமை பேராசிரியார் டாக்டர் பு. ராஜ்ஜா அவர்களே,

அருமை நண்பரும் சாகித்ய அகாடெமியின் தென்மண்டல அலுவலக பொறுப்பு அலுவலர், திரு ஜா. பொன்னுதுரை அவர்களே,

சக இலக்கியப் பயணாளிகளே, நண்பர்களே, அனைவருக்கும் எனது முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

உள்ளபடியே, இது பெருமைக்குரிய ஒரு தருணம் என்றுதான் சொல்ல வேண்டும்.

பன்முக ஆற்றல் கொண்ட ஓர் இலக்கியவாதியைச் சந்தித்து, அவரது படைப்பாற்றல் அனுபவங்களைப் பெறுவதென்பது, தமது இலக்கியப் பயணத்தில் நாம் எங்கிருக்கிறோம், எந்த இலக்கை நோக்கி நாம் பயணிக்க வேண்டும் என்று தம்மை சுய பரிசோதனை செய்து கொண்டு முன்னேற உதவும்.

     ஆத்மாவை சுத்தப்படுத்துவதாக, சுய விசாரணைக்கு உட்படுத்துவதாக இலக்கியத்தின் பணி அமைய வேண்டும். அவ்வாறு செய்வதுதான் உயர்ந்த இலக்கியமாக இருக்க முடியும். இலக்கியவாதிகளைச் சந்திக்கின்ற போதும் அத்தகைய உணர்வுதான் மேலிட வேண்டும்.  ஆனால், இன்று இலக்கியவாதிகள் எப்படி இருக்கிறார்கள் ?  முதன்முறையாக ஒருவரது படைப்பை வாசிக்கும்போது அந்தப் படைப்பாளி ஒரு முகம் காட்டுகிறார். அந்தப் படைப்பாளியேடு பழகுகிற வாய்ப்பு ஏற்படுகிறபோது, அந்தப் படைப்பில் அவர் காட்டுகிற முகத்திற்கு கொஞ்சமும் தொடர்பில்லாத இன்னொரு முகத்தோடு அவர் தெரிகிறார். நேரில் அவர் காட்டுகிற பிம்பத்தோடு, அவரது எழுத்துக்களை மீண்டும் வாசிக்கும் போது, தொழுநோயாளியின் உடம்பிலிருந்து உருகி உருகி ஒழுகும் சதைப்பிண்டத்தைப் போல அவரது முகத்தோடு சேர்ந்து, அவரது எழுத்துக்களும் ஒழுகி, ஒழுகி கரைந்து போகிறது.  என்னைப் போலவே, இந்த அனுபவம் உங்களில் பலருக்கும் பல சந்தர்ப்பங்களில் வாய்த்திருக்கும்.

படைப்புக்கும் படைப்பாளிக்கும் இடைவெளியில்லாத எழுத்துக்கள் காலத்தை வென்று நிற்பதாக அல்ல; காலத்தையே வழி நடத்துகிற எழுத்தாக இருப்பதை வரலாற்றின் வரிசை தோறும் நாம் காண்கிறேம்.

அப்படி, படைப்பிற்கும், படைப்பாளிக்கும் இடைவெளியில்லாத எழுத்துக்களுக்கு சொந்தக்காரர்களாக, பாரதியின் மிச்சங்களாக இன்னும் சில படைப்பாளிகள் நம்மோடு இருக்கத்தான் செய்கிறார்கள்.

அப்படி ஒரு தேர்ந்த படைப்பாளியாக, ஆகச்சிறந்த கதைசொல்லிகளில் ஒருவராக இருக்கிறார் மாலத்தீவைச் சார்ந்த எழுத்தாளர் திரு. இப்ராகிம் வஹீத் அவர்கள். மாலத்தீவு மக்களின் வாழ்க்கையை மையமிட்ட அவரது சிறுகதைகளில் 1. A Day on the Beach, 2. Office, Sweet Office, 3. Jack in the Box, 4. Night Flight, 5. Silent Night  and 6. Devi போன்றவை அவரது படைப்பாற்றலை நிறுவும் சிறந்த உதாரணங்கள். ஓர் அரசு அதிகாரியாகவும் இருந்துகொண்டு, இலக்கியவாதியாகவும் இருப்பதில் உள்ள சிரமங்களை நான் நன்கு அறிவேன். பல்வேறு பொறுப்புகளுக்கு இடையேதான் இலக்கியக் கடமையையும் ஆற்ற வேண்டியிருக்கிறது.

பல்வேறு அலுவல்களுக்கிடையே புதுச்சேரிக்கு வருகை தந்து, தமது இலக்கிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ள மாலத்தீவு எழுத்தாளர் திரு. இப்ராகிம் வஹீத் அவர்களுக்கு சாகித்ய அகாதெமி சார்பிலும், புதுச்சேரி எழுத்தாளர்கள் சார்பிலும் எனது சார்பிலும் உளங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதுச்சேரி மண் தமிழ் இலக்கிய உலகிற்கு வழங்கியுள்ள கொடைகள் ஏராளம்.  புதுக்கவிதையின் பிதாமகன் என்று பாரதியைக் குறிப்பிடுகிறோம். அவரது வசன கவிதைகள்தான் புதுக்கவிதையின் முன்னோடி என்கிறேம். 1930 களில் புதுச்சேரியில் இருந்தபோதுதான் அவர் இந்த வசன கவிதைகளை எழுதினார். அப்படியென்றால், புதுக்கவிதையின் வரலாறு புதுச்சேரியில் இருந்துதான் தொடங்குகிறது.  தமிழின் முதல் நாவல் புதுச்சேரியில் தான் எழுதப்பட்டது என்பார் எழுத்தாளர் பிரபஞ்சன்.  இப்படியாகத் தொடர்ந்து, புதுச்சேரியை மையமிட்டுத் தொடங்கப்பட்ட நிறப்பிரிகை தலித் இலக்கியத்திற்கும், பெண்ணியச் சிந்தனைகளுக்கும் இடமளித்திருக்கிறது. வல்லினம்,  அடித்தள மக்கள் ஆய்வுகளை முன்னெடுத்தது.  இவற்றையெல்லாம்விட, புதுச்சேரி மண் தமிழ் இலக்கிய உலகிற்கு அளித்திருக்கும் மிகப்பெரிய கொடை பேராசிரியர் ராஜா. புதுச்சேரி இலக்கியவாதிகளையும், அவர்தம் படைப்புகளையும் மொழிபெயர்த்து வழங்கும் பணியை சத்தமில்லாமல் செய்துகொண்டிருக்கிறார். அதுமட்டுமல்ல, புதுச்சேரி எழுத்தாளர்களுக்காக, என்னோடு இணைந்து சாகித்ய அகாதெமியிலும் குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.  இந்த நிகழ்ச்சியை முன்னின்று நடத்தியிருக்கிறார். அவருக்கும் இந்த தருணத்தில் பாராட்டுதல்களையும் நன்றியையும் உணர்வுப்பூர்வமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மிகச்சிறப்பாக செய்திருக்கிறார்கள், சாகித்ய அகாதெமியின் தென்மண்டல பொறுப்பு அலுவலர் திரு ஜா. பொன்னுதுரை உள்ளிட்ட அவரது சக அலுவலர்கள். அவர்கள். அத்தனைபேருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்த இலக்கிய அன்பர்கள், ஆர்வலர்கள் மற்றும் ஏனைய அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்து விடைபெறுகிறேன் நன்றி, வணக்கம்.



No comments: