Saturday, December 25, 2010

மகன் "ம" வுக்கு

இணைக்க


மகன் "ம" வுக்கு

ஆகவே -
எங்கும் வெற்றிடம் என்பது
சாத்தியமே இல்லை
இல்லவே இல்லை
எப்போதும் இல்லை;
வெறுமையில் நுழைவதென்பது
சாத்தியமில்லை.
இப்போதும்கூட நீ அதை அறிவாய்
மனதில் நுழைவது முயற்சியால் அடைந்தது
உடலில் நுழைவது சிற்றின்பம்.

நானும்கூட அதை அறிவேன்,
கசக்கிப் பிழியும் சாரத்தில்
வெறுமை துளித்துளியாய் வீழும்
மேலும்,
மனதிலிருந்து, உடம்பிலிருந்து
வெறுமை தப்பித்தோடும்
வெறுமை துப்புறவாகும்
எனது, உனது தலைமேலுள்ள
இருத்தலின் சுமை ஒன்றானது, சமமானது.

இன்று
வெற்றிடத்தில் உன்னையே நிரப்புகிறாய்
நீ போ, இலக்கின்றி சுற்று
தினசரி வேலைகளைக் கவனி
நான் துண்டித்துக்கொள்ள மாட்டேன்
எனவே
நான் உன்னைத் தொடர்வேன்
என்னுள் என்னையும் உன்னையும்
இழக்கும் வரை.

மகனே - ம
இப்போது நீ நேரத்தை வசமாக்கி
அதனோடு ஒன்றுசேர்
இப்போது வெறுமையை ஊடுறுவு
ம - எனது மகனே
உனக்கு நினைவிருக்கிறதா ?
நீ சிறுவனாக இருந்தபோது
உனக்கு கதைகள் சொல்லிருக்கிறேன்
இறகுள்ள தேவதை கதைகள்
அந்த நேரத்தில்
ஆர்வம் தேங்கிய உனது முகம்
என்னைக் கோள்வி கேட்டது
தேவதைக்கு இறகுகள் உண்டா ?
ஆமென்று நான் முனுமுனுத்தேன்
நீ இல்லை என்பதாய் எடுத்துக்கொண்டாய்.

ஆண்டுகள் பல கடந்தன
நீ பெரியவனானாய்
நான் முதுமையில் இருந்தேன்
உனக்கு ஒரு தேவதை கிடைத்தால்
இறுதியாக நான் எனது கதையில்
ஓய்வெடுத்துக்கொண்டேன்.
அந்த தேவதை
இங்கு, அங்கு எங்குமென
நடமாடினாள்
ஒவ்வொருவருக்கும் ஒரு மயிலிறகை
பரிசளித்தபடி.
மகிழ்ச்சி ஒளிந்தது
இரத்த நாளங்கள் அதிர்ந்து இசைத்தன
அனைத்தும் சட்டென்று...
ம - எனது மகனே
அவசர அவசரமாக வீட்டிருந்து பறந்துபோயின
இறகுகள் காற்றில் மிதந்து செல்கின்றன
நான் வார்த்தைகளற்றவனானேன்
நீ பேச்சற்றவனானாய்
நான் சுற்றிலும் வெறித்து நோக்குகிறேன்
நீ இந்த வெளியை வியந்து பார்க்கிறாய்
வீட்டுச் சுவர்கள் பின்புறக்கூரையென எங்கும்
குருட்டு இருட்டு வட்டமாய் சுற்றுகிறது.

மறுபடியும்
உனது மெளனமான கேள்விகள்
என்னை சூழ்கின்றன
என்னை உறைய   வைக்கின்றன.
நான் ஊமையானேன்
அர்த்தமுள்ள சப்தமற்று, பொருளற்று
உன்னை உற்று நோக்குகிறேன்
நானே வெறுமையானேன்
எனது கதைகளின் தேவதையை
அங்கே கண்டுபிடிக்க முயற்சித்து காண்கிறேன்
எனது மகனே - ம.

                                                                   - ப்ரஜீவன் மேத்தா

குஜராத்தி மொழியிலிருந்து
ஆங்கிலத்தில் : திலீப் ஜாவேரி

தமிழில்         : மகரந்தன்


No comments: