Friday, July 31, 2009

பூனைப் புராணம்

இணைக்க

எலிகளுக்கு எப்போதும்
பூனைப் புராணம்தான்

காதோடு காதாக
எலிகள் பேசிக்கொண்டன
"பூனைக்கு மணிகட்ட வேண்டும்"

யார் கட்டுவது?
அவைகளுக்குள் குழப்பம்

கூடவே இல்லை
உடைந்து உடைந்து
அணிகள் தோன்றின

ஒத்துவந்தவை
கூட்டணி வைத்தன.
தனித்து நின்றவை
சோரம் போயின

அவைகளுக்குள்ளும்
அடிதடிச் சண்டை
மணிகட்டும் விஷேயம்
மறந்தே போயின

வந்து சேர்ந்தன
வாக்குப் பெட்டிகள்

எதிரே வந்த
பூனையைக் கண்டதும்
எலிகள் போட்டது
வாக்குகள் அல்ல
புழுக்கைகள்

எலிகளுக்கு இன்னமும்
பூனைப் புராணம்தான்

வீட்டு முதலாளி சென்னார்
"இன்னும் இரண்டு
பூனைகள் வளர்த்தால் தேவலை
எலிகளின் தொல்லை
தாங்க முடியவில்லை"

- மகரந்தன்

Thursday, July 30, 2009

பார்வைகள்

இணைக்க

கல்லூரி போகப் படியிறங்கினால்
அங்குதான் போகின்றேனா
என்ற
பக்கத்து வீட்டு மாமியின்
போலீஸ் பார்வை

வீதியில் இறங்கி
நடக்க ஆரம்பித்தால்
காலிப் பயல்களின்
விசில் பார்வை

வயோதிகனிடத்தில்
வாலிபப் பார்வை

வகுப்பறையில்
ஆசிரியரின்
கேள்விப் பார்வை
சக மாணவர்களின்
கேலிப் பார்வை

பஸ்ஸிற்கு நிற்கையில்
ரோமியோக்களின்
காதல் பார்வை

பஸ்ஸிற்குள் எத்தனையோ
உரசல் பார்வை
தனித்து நடந்தால்
தனியே அழைக்கும்
"சிகப்பு" பார்வை

வேட்டைக்கு தப்பி
வீட்டுக்கு தந்தால்
என் புத்தகங்களில்
கடிதம் தேடும்
உன்னிடத்தில்
சந்தேகப் பார்வை

நீயுமா அம்மா . . . .

- மகரந்தன்

Friday, July 24, 2009

மண்குதிரை

இணைக்க

வர்ண ஜொலிப்பு
வாண வேடிக்கைகளோடு
பிரதிஷ்டை செய்யப்பட்டது
மண்குதிரை.

இது...
காவல் தெய்வங்களின்
புறப்பாட்டிற்கானது.
இதன்மீது ஏறித்தான்
கூட்டணியில் தெய்வங்கள்
வேட்டைக்குப் போகும்
புலிகளைவிடுத்து
எலிகளை வேட்டையாடும்.

வேட்டைப் பொருள்களாக
பத்மினிகளின் கற்போ
அப்பாவிகளின் கண்ணீரோ
சாபமோ கிடைக்கும்

கடமையை மறந்த
காவல் தெய்வங்கள்
தங்களுக்குள் இட்டுக்கொள்ளும்
குடுமிச் சண்டையில்
குதிரையின் பாகங்கள்
உதிர்ந்த ரோமங்களாகும்.

தெய்வங்கள்
பதவி இழக்கும்.

மூடக் குயவர்கள்
மறுபடியும் ஒன்றுகூடி
குதிரை செய்வார்கள்.