Wednesday, September 23, 2009

ஊருக்குத் திரும்புதல்

இணைக்க


ஊருக்குத் திரும்புதல்

பழகிய ஊருக்குப்
பாதையில்லை.

பாதைதேடி வரைபடம் பிரித்தால்
பிஞ்சென்றும் மூப்பென்றும்
பார்க்கவொண்ணா குருதி
உறங்கும் பிணவாடை
பயணவழி வரைபடமெங்கும்.

எதிர்மறிக்கும்
கானல் வரி
எத்தாகமும் தீர்க்க முன்வராது
சோகம் காட்டும்
கண்ணீர் உகுக்கும்.

முள்கம்பி பொத்திய கூண்டுக்குள்
கபால ஓடுகளின் ஊடே
மறைந்து கிடக்கிறது
சிறுகிளை தாழ்த்தி
தாலாட்டி வளர்த்த
புங்கை மரங்களடர்ந்த
இளம்பிராயம்.

மரங்களுமில்லை
மனிதர்களுமில்லை
இனி -
மரிக்க மரணமுமில்லை.

தம்மபத வாசிகளின்
ஒரு கையில் புறாக்கறி
மறுகையில்
பச்சைக் குருதி வழியும்
கோப்பை.
கால்களுக்கடியில்
சாயம் வெளுத்த
மூவர்ணக் கொடியிலிருந்து
வெளியேற எத்தனிக்கும்
ஆரங்களுடைந்த தர்மச்சக்கரம்.

உச்சரிக்கவோ
எழுதிக்காட்டவோ கூசும்
தடித்த வாய் வார்த்தைகளின்
இடைவெளியில்
அடிக்கடி எழுகிறது
"வாழ்க பாரதம் ! வாழ்க மானுடம் !!"

வரமோ சாபமோவற்ற
ஏதிலிகளையொத்து
வெறுமையின் ஒப்பாரியில் நீள்கிறது
ஊருக்குத் திரும்பும்
பயணவழிப் பாதை.

- மகரந்தன்

Tuesday, September 22, 2009

மயானத்தில் மேயும் மனம்

இணைக்க


வீசும் காற்றின் வலுவுக்கேற்ப
கீழிறங்கி, மேலேறி
இலாவகம் காட்டி
அசைந்து அசைந்து
அந்தரத்தில் மிதந்தபடி
அது.

எந்த இலாவணிக்கு
இப்படி இலாவகம் காட்டுகிறதோ !

எதிர்ப்படும்
மரக்கிளையில் முட்டி
கீழே விழுந்துவிடுமோவென
அஞ்சுகையில்
விசுக்கென மேலெழுந்து
வட்டமடித்து
நின்று நிதானித்து
"ஏமாந்தியா" என்றபடி
மேலெழுந்து, கீழிறங்கி
அசைந்து அசைந்து
அந்தரத்தில் மிதந்தபடி
தகவமைப்பின் சுழிப்பென
அந்த இறகு.

0

அது -
யாருடைய மௌனம் ?
இறந்தபின் எழுந்ததா ?
அதற்கு முன்பே உதிர்ந்ததா ?
அதன் மிருது எத்தகைய தன்மையது ?
மயிரிழைகள் எத்தனை இருக்கக்கூடும் ?
எப்படி வாய்த்தது
இந்த செப்படி வித்தை ?

ஏமாற்றத்தின் எச்சத்தில்
ஆராய்ச்சிக் கூடத்தைக்
கட்டியெழுப்பும்
மயானத்தில் மேயும் மனம்.

- மகரந்தன்