Wednesday, January 9, 2013

மரங்களின் மரணம்

இணைக்க






மீண்டும் அவர்கள் வந்திருக்கிறார்கள்
கையில் ஒரு பட்டியலோடு.
அதில் என் பெயரும் இருக்கிறது
இம்முறை-
அவர்களோடு போகவே
விருப்பப்படுகிறேன்.

பணக்கார பயணிகள்
வந்து போகுமிடம்;
என் வசிப்பிடம்.

இங்கு-
ஒரு சமயம்
உயரமாக வளர்ந்த
அடர்ந்த பசுங்காடுகள் இருந்தன.

மலை முகடுகளிலும்
ஆற்றின் திவளைகளிலும்
யானைத் தந்தத்தின் நிறத்தில் 
விரிந்து கிடக்கும் மணற் செதில்களில்
மின்னும் சூரிய ஒளியில்
ஓர் ஆன்மீக அமைதி தவழும்.

பரிசுத்தமான
தென்றலின் ஆட்சி
இங்கு குடிகொண்டிருக்கும்.

அருகில் இருந்த நகரம்
சிறியதாய் இருந்தபோது
சில மரம் வெட்டிகள் வந்து போனார்கள்.
பின்னும் 
பலமுறை வந்தார்கள்
நகரம் பெருநகரமாகிவிட்டது.

விலைமதிப்பற்ற மரங்களுக்காக
இப்போது-
மீண்டும் வந்திருக்கிறார்கள்;
கையில் ஒரு பட்டியலோடு.
அதில் என் பெயரும் இருக்கிறது.

இம்முறை-
அவர்களோடு பயணிக்கவே விரும்புகிறேன்.
எனக்கு முன்னால்
இங்கிருந்து குடிபெயர்ந்த
சக நண்பர்களைக் காண
ஆவலாய் இருக்கிறது.

இனி இங்கே-
மலைகளும் ஆறுகளும்
மணல் திட்டுகளும் இருக்கலாம்.

ஆனால்-
பருத்து திமிர்த்த அந்த கறுத்த மரம். . .
நெஞ்சை நிமிர்த்தி வீராப்பு பேசும்
அந்த தேக்கு மரம். . . 
காற்றுக்கு வாசனை பூசிவிடும்
அந்த சந்தன மரம்....
ஆற்று நீரில் அடிக்கடி முகம் பார்க்கும்
அந்த ரோஸ் மரம்.....

இன்னும்.... இன்னும்...
அந்த பரிசுத்த தென்றலின் ஆட்சி...... ?


                                               - மகரந்தன்

No comments: