Monday, October 5, 2009

வாசிக்க மறந்த கதை

இணைக்க


வாசிக்க மறந்த கதை

கருணைக் கண்கொண்டு 
இன்றிரவை வழிநடத்துகிறது 
தொலைந்துபோன 
திறவுகோலைத் தேடித்தேடி 
உறக்கமிழந்த 
நடுத்தரவாசியின் 
வெப்பமூச்சுக்காற்று.  


பருவத்திற்கு பருவம் 
மாறுபாடுகொள்ளும் 
புனிதங்களிலும் புனிதம் 
இருளைத் திறக்குமந்த 
திறவுகோல்.  


காணாமல் போனதற்கு 
அஞ்சலி செலுத்த நினைக்கையில் 
எதிர்வந்து நிற்கிறது 
என்றோ செலுத்திய அஞ்சலிக்கு 
எதிர்ப்பதமாய் 
மங்கிப்போன நினைவலைகளில் 
சிறு ஒளிக்கீற்றாய் 
மற்றொரு பழைய திறவுகோல் 
வாசிக்க மறந்த பொழுதுகளை 
நேர்நிறுத்தி.  


இப்போது- 
இரவை வழிநடத்துகிறது 
வெறுமையின் துணுக்குகளால் 
நிரப்பப்பட்ட 
முட்டைகளை அடைகாக்கும் 
உறக்கமிழந்த
நடுத்தரவாசியின் 
உயர் அழுத்த
வெப்ப மூச்சுக் காற்று 
தன் கதையையும் 
தனக்கான கதையையும் 
வாசிக்கத் திராணியற்று.  


- மகரந்தன்

1 comment:

முனைவர் இரத்தின.புகழேந்தி said...

நடுத்தர வர்க்கம் பற்றிய சித்தரிப்பு அருமை
தினம் ஒரு கவைதை என இலக்கு வைத்து எழுதுங்கள். வாழ்த்துகள்.