நான் கைநாட்டாய் இருந்தால் நல்லது
அறிவியலைப் படித்துக்கொண்டிருந்த போது
நியூட்டனின் ஆப்பிள்
கீழே விழுவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்
அப்போது -
எனக்கு முதலில் தோன்றியது
அதை நான் சாப்பிட வேண்டும்
சமூக வாழ்க்கைபாடத்தைப்
படித்துக் கொண்டிருந்தபோது
ஹரிஜன் ஆசிரமச் சாலையில் உள்ள
கண்ணாடி வீட்டைப் பார்த்துக் கொண்டிருந்தேன்
அப்போது -
எனக்கு முதலில் தோன்றியது
ஒரு கல்லை அதன்மீது எறிய வேண்டும்
தாகத்தை அடக்கிக் கொண்டிருந்தபோது
ஊருக்கு ஒதுக்குப்புறமாய் இருந்த
தண்ணீர் பானையைப் பார்த்துக் கொண்டிருந்தேன்
அப்போது -
எனக்கு முதலில் தோன்றியது
நாய்போல் ஒரு காலைத் தூக்கி
அதனுள் மூத்திரம் அடிக்க வேண்டும்
நரி ஒரு நகரத்திற்கு சென்றது
தற்செயலாக சாயத்தொட்டியில் வீழ்ந்தது
வண்ணத்தில் நிறம் மாறி பார்ப்பதற்கு
ஒரு சிங்கம்போல் காட்சியளித்தது
சற்றேறக்குறைய
இந்தக் கோணத்திலிருந்து
பல்வேறு பொருள்களில்
கதைகளை உருவாக்கிக் கொண்டிருந்தேன்
அப்போது -
இறுதியாக எனக்குத் தோன்றியது
மறுபடியும் கைநாட்டாக வேண்டும்.
படிப்பதைவிடவும்
அவமானம், வெறுப்பு, வன்முறை,
செயலிழந்த உற்சாகம் ஆகியற்றை
அறிந்துகொண்டதால் கஷ்டப்படுவதைவிடவும்
நன்றாக இருக்கும்
நான் கைநாட்டாக இருந்திருந்தால்
அநீதியில் தலையில் ''ஆடி"யால் ஓங்கி அடித்திருப்பேன்
அல்லது
'மகுடி'குடித்து அவமானத்தை விழுங்கியிருப்பேன்.
- நீரவ் பாட்டீல்
ஆங்கிலத்தில்: கண்பத் வாங்கர்
தமிழில்: மகரந்தன்
*ஆடி - செத்த மாட்டைக் கட்டி கொண்டுசெல்ல பயன்படும் மரக்கழி
**மகுடி - மகுடா எனப்படும் பொருளில் இருந்து தயாரிக்கப்படும் சாராயம்
No comments:
Post a Comment