எங்கள் சட்டையின் பாடல்
நாங்கள் ஒரு நாகரீக சாதி
அல்லது
பழங்குடி என்று நீங்கள் அழைக்கலாம்
எங்கள் கொள்ளுத்தாத்தா மாயோ தெத்
மூன்று கைகளைக்கொண்ட
ஒரு சட்டை வைத்திருந்தார்
அவரது அப்பா
பிணத்தை மூடும் துணியை
அவரது சட்டையாக வைத்திருந்தார்
இவரது அப்பா தனது சொந்தத் தோலையே
சட்டையாக அணிந்திருந்தார்
நான் நாகரீகம் குறைந்தவன் அல்ல -
நான் நடைபாதையைச் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது
பாக்கெட் இல்லாத
கைகள் இல்லாத
பட்டன்கள் இல்லாத
ஒரு பழைய 'பீட்டர் இங்லெண்ட்'
இப்போதுதான் கிடைத்தது.
ஒவ்வொரு வழிப்போக்கரும்
கடவுளின் பெயரால் அதற்கு
மரியாதையைத் தர உந்தப்படுகிறார்கள்
எனது கழுத்துப்பட்டையைத் தொடாமலேயே.
எங்கள் சட்டை
ஒரு பாடலை வைத்திருக்கிறது
நம்பிக்கையற்ற நாகரீகங்களைப்
பாடுவதற்காக.
குறிப்பு : குஜராத் வரலாற்றின் மத்திய காலத்தில், எளிதில் அடையாளம் காணும் வகையிலும், தங்களிடமிருந்து ஒதுக்கி வைக்கும் வகையிலும் மூன்று கைகளை உடைய சட்டையை அணியச் சொல்லி சாதி இந்துக்களால், தலித்துகள் நிர்ப்பந்திக்கப் பட்டனர். மனிதத் தன்மையற்ற இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த 'மாயோ தெத்'தை கதை நாயகனாக குஜராத் நாட்டார் கதைகள் கொண்டுள்ளன.
குஜராத் மொழியிலும் ஆங்கிலத்திலும் : நீரவ் பாட்டீல்
தமிழில் : மகரந்தன்
No comments:
Post a Comment