Saturday, January 15, 2011

மரணக்கொடை

இணைக்க


மரணக்கொடை  
காத்திருக்காது 
மரணத்துடன் சேர்ந்தே 
பொழிகிறது மழை.

மிகத்துள்ளியமான மௌனம் 
தன் இலைகளை 
உதிர்த்துச் செல்கிறது 
சுரந்து கொட்டும் 
கண்ணீரின் கனம் தாலாமல் 
காம்புகளோடு.

மேலும் சுமக்க முடியாமல் 
பாரத்தை மேலெழுப்புகிறது 
கண்ணீர்.

நூலேணி வெறுத்து 
சவக்குழி இறங்குகிறது 
படிமங்களைத் துறந்த 
உள்வயப் பிரக்ஞை.

பெருத்தமழை விதைத்த 
நோய்களினூடே
பறவை கொத்தும் வலியில் 
கதறும் காயங்களடர்ந்த 
சருமத்தின்மேல் 
காயக்களிம்பென 
எக்களித்து வெளியேற்றி 
வேசித்தனத்தின் 
உச்சங்காட்டுகிறது 
ஈனம் தெரியாத இனம்.  

பிண்டம் தின்று 
சாண்டை குடிக்கும் 
குறுமணல் பதறும் 
ஆரலைக் கள்வர் காடுகளில் 
அணுவின் துகள்களாய் 
கரைந்து கொண்டிருக்கின்றன 
பொத்திய காதுகளின் 
மடல்களைக் குத்திக்கிழித்தபடி
மரணத்தைக் கொடையாக்கும்
குரல்கள் . . .  
குரல்கள் . . . 
குரல்கள் . . .

- மகரந்தன்



No comments: