Friday, January 28, 2011

இரவு நெறிகள்

இணைக்க



இரவு நெறிகள் 

மரணம் -
தொங்கிக் கொண்டிருக்கிறது கனமாக
துர்நாற்றமெடுக்கும்  இரவின் காற்றில்.

அது வீசுகிறது
வெள்ளை நடைபாதையான
எனது எலும்புகளின் ஊடாக.

சுருள் படிக்கட்டுகளான
எனது முதுகெலும்பில்
அதன் அழுத்தமான காலடிகள் ஏறும்போது,
அதன் அமைதி,
எனது இரத்தக்கதவுகளைச்
சன்னமாகத் தட்டுவதை
நான் கேட்கமுடியுமா ?

அல்லது -
மின்னும் கூர்மையான கட்டாரியின் முனையால்
அறுபடும் இடைவெளியில்
அதிரும் இரவின் சதைபோல்
அது கீழிறங்கி வருமா ?

வாழ்வென்பது
ஒரு தனிப்பறவை
உடற்கூண்டிற்குள் மாட்டிக்கொள்வது.

நிலவின் விழிப்பான விழிகள்
நான் எங்கு சென்றாலும் பின்தொடர்கிறது.

மேலும் -
எனது வீட்டுமுற்றத்தில்
திமிர்த்த மரங்கள்
எதிர்த்து நிற்கின்றன
முகமுடி அணிந்த தீவிரவாதிகள்
என்னை நோக்கி
அவர்களது துப்பாக்கி முனையை நீட்டியிருப்பதைப் போல்   

  ஆங்கில மூலம் : துர்கா பிரசாத் பாண்டே 
  தமிழில் : மகரந்தன் 



Sunday, January 23, 2011

நடுநிசி, கைவிடப்பட்ட ஆலயம்

இணைக்க


நடுநிசி, கைவிடப்பட்ட ஆலயம்

இரவு தூரங்களை இழுத்து நீளமாக்குகிறது
முடிவற்றதைப்போல்.

இரவு மரணத்தைப் போல.

ஒற்றைப் பறவையின் ஆழ்ந்த கவலை
அமைதியாக வந்தமர்கிறது
எனது தனிமையின்
அடர்ந்த கிளைமீது.

ஏதோ ஓர் இடத்தில்,
ஒரு பயம் தன்னைத் திறந்துகொள்கிறது, அமைதியாக,
சில பெயர்தெரியாத காட்டுப் பூவைப் போல.
அதன் கருத்த இதழ்கள்
நமது கடந்தகாலக் கல்லறையில் இருந்து
ஒளிந்திருந்து தாக்குகிறது

கைவிடப்பட்ட
கருவறை மூலையில்
விட்டு விட்டு எரியும் அகல் விளக்கு
சண்டை போடுகிறது
தனது சொந்த நிழலோடு.

கைவிடப்பட்ட அந்த ஆலயத்தின் உள்ளே
கருங்கல் தெய்வம்
பலவீனமாக புன்னகைக்கிறது
ஓர் அக்கறையற்ற குழந்தை
தனது நூற்றாண்டு பழம்புராணங்களின்மீது
செங்குத்தாக நின்றுகொண்டிருப்பதைப் போல.

ஆங்கில மூலம்: துர்கா பிரசாத் பாண்டே

தமிழில் : மகரந்தன்

Friday, January 21, 2011

நான் கைநாட்டாய் இருந்தால் நல்லது

இணைக்க


நான் கைநாட்டாய் இருந்தால் நல்லது

அறிவியலைப் படித்துக்கொண்டிருந்த போது
நியூட்டனின் ஆப்பிள்
கீழே விழுவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்
அப்போது -
எனக்கு முதலில் தோன்றியது
அதை நான் சாப்பிட வேண்டும்

சமூக வாழ்க்கைபாடத்தைப்
படித்துக் கொண்டிருந்தபோது
ஹரிஜன் ஆசிரமச் சாலையில் உள்ள
கண்ணாடி வீட்டைப் பார்த்துக் கொண்டிருந்தேன்
அப்போது -
எனக்கு முதலில் தோன்றியது
ஒரு கல்லை அதன்மீது எறிய வேண்டும்

தாகத்தை அடக்கிக் கொண்டிருந்தபோது
ஊருக்கு ஒதுக்குப்புறமாய் இருந்த
தண்ணீர் பானையைப் பார்த்துக் கொண்டிருந்தேன்
அப்போது -
எனக்கு முதலில் தோன்றியது
நாய்போல் ஒரு காலைத் தூக்கி
அதனுள் மூத்திரம் அடிக்க வேண்டும்

நரி ஒரு நகரத்திற்கு சென்றது
தற்செயலாக சாயத்தொட்டியில் வீழ்ந்தது
வண்ணத்தில் நிறம் மாறி பார்ப்பதற்கு
ஒரு சிங்கம்போல் காட்சியளித்தது
சற்றேறக்குறைய
இந்தக் கோணத்திலிருந்து
பல்வேறு பொருள்களில்
கதைகளை உருவாக்கிக் கொண்டிருந்தேன்
அப்போது -
இறுதியாக எனக்குத் தோன்றியது
மறுபடியும் கைநாட்டாக வேண்டும்.

படிப்பதைவிடவும்
அவமானம், வெறுப்பு, வன்முறை,
செயலிழந்த உற்சாகம் ஆகியற்றை
அறிந்துகொண்டதால் கஷ்டப்படுவதைவிடவும் 
நன்றாக இருக்கும்
நான் கைநாட்டாக இருந்திருந்தால்
அநீதியில் தலையில் ''ஆடி"யால் ஓங்கி அடித்திருப்பேன்
அல்லது
'மகுடி'குடித்து அவமானத்தை விழுங்கியிருப்பேன்.

                                                           - நீரவ் பாட்டீல்

         ஆங்கிலத்தில்:  கண்பத் வாங்கர்
         தமிழில்: மகரந்தன்

*ஆடி - செத்த மாட்டைக் கட்டி கொண்டுசெல்ல பயன்படும் மரக்கழி 
**மகுடி - மகுடா எனப்படும் பொருளில் இருந்து தயாரிக்கப்படும் சாராயம்

Wednesday, January 19, 2011

எங்கள் சட்டையின் பாடல்

இணைக்க


எங்கள் சட்டையின் பாடல்


நாங்கள் ஒரு நாகரீக சாதி
அல்லது
பழங்குடி என்று நீங்கள் அழைக்கலாம்


எங்கள் கொள்ளுத்தாத்தா மாயோ தெத்
மூன்று கைகளைக்கொண்ட
ஒரு சட்டை வைத்திருந்தார்
அவரது அப்பா
பிணத்தை மூடும் துணியை 
அவரது சட்டையாக வைத்திருந்தார்
இவரது அப்பா தனது சொந்தத் தோலையே
சட்டையாக அணிந்திருந்தார்


நான் நாகரீகம் குறைந்தவன் அல்ல -
நான் நடைபாதையைச் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது
பாக்கெட் இல்லாத
கைகள் இல்லாத
பட்டன்கள் இல்லாத
ஒரு பழைய 'பீட்டர் இங்லெண்ட்'
இப்போதுதான் கிடைத்தது.


ஒவ்வொரு வழிப்போக்கரும்
கடவுளின் பெயரால் அதற்கு
மரியாதையைத் தர உந்தப்படுகிறார்கள்
எனது கழுத்துப்பட்டையைத் தொடாமலேயே.


எங்கள் சட்டை
ஒரு பாடலை வைத்திருக்கிறது
நம்பிக்கையற்ற நாகரீகங்களைப்
பாடுவதற்காக.


குறிப்பு : குஜராத் வரலாற்றின் மத்திய காலத்தில், எளிதில் அடையாளம் காணும் வகையிலும், தங்களிடமிருந்து ஒதுக்கி வைக்கும் வகையிலும் மூன்று கைகளை உடைய சட்டையை அணியச் சொல்லி சாதி இந்துக்களால், தலித்துகள் நிர்ப்பந்திக்கப் பட்டனர். மனிதத் தன்மையற்ற இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த 'மாயோ தெத்'தை கதை நாயகனாக குஜராத் நாட்டார் கதைகள் கொண்டுள்ளன.


குஜராத் மொழியிலும் ஆங்கிலத்திலும் : நீரவ் பாட்டீல்
தமிழில் : மகரந்தன்

Saturday, January 15, 2011

மரணக்கொடை

இணைக்க


மரணக்கொடை  
காத்திருக்காது 
மரணத்துடன் சேர்ந்தே 
பொழிகிறது மழை.

மிகத்துள்ளியமான மௌனம் 
தன் இலைகளை 
உதிர்த்துச் செல்கிறது 
சுரந்து கொட்டும் 
கண்ணீரின் கனம் தாலாமல் 
காம்புகளோடு.

மேலும் சுமக்க முடியாமல் 
பாரத்தை மேலெழுப்புகிறது 
கண்ணீர்.

நூலேணி வெறுத்து 
சவக்குழி இறங்குகிறது 
படிமங்களைத் துறந்த 
உள்வயப் பிரக்ஞை.

பெருத்தமழை விதைத்த 
நோய்களினூடே
பறவை கொத்தும் வலியில் 
கதறும் காயங்களடர்ந்த 
சருமத்தின்மேல் 
காயக்களிம்பென 
எக்களித்து வெளியேற்றி 
வேசித்தனத்தின் 
உச்சங்காட்டுகிறது 
ஈனம் தெரியாத இனம்.  

பிண்டம் தின்று 
சாண்டை குடிக்கும் 
குறுமணல் பதறும் 
ஆரலைக் கள்வர் காடுகளில் 
அணுவின் துகள்களாய் 
கரைந்து கொண்டிருக்கின்றன 
பொத்திய காதுகளின் 
மடல்களைக் குத்திக்கிழித்தபடி
மரணத்தைக் கொடையாக்கும்
குரல்கள் . . .  
குரல்கள் . . . 
குரல்கள் . . .

- மகரந்தன்



Wednesday, January 5, 2011

குழந்தை அம்மாவுக்கு

இணைக்க

 குழந்தை அம்மாவுக்கு

இல்லை, இல்லை
நான் ஆடைகளை அணிந்துகொள்ள விரும்பவில்லை
இந்த மேல்சட்டையை
இந்த கால்சட்டையை
எடுத்துச் செல்
நான் ஆடைகளை அணிந்துகொள்ள மாட்டேன்.


தென்றலும் சூரிய ஒளியும்
ஆடைகளை அணிந்து கொள்கின்றனவா !
அந்த அம்மண சிறுநதி
மேல்சட்டையையும் கால்சட்டையையும்
ஏன் அணிந்துகொள்ளவில்லை ?

பார் !
அந்த மரமும் அதன் நிழலும்
ஒவ்வொரு நாளும்
கண்ணாமூச்சி ஆடுவதை
யார் பள்ளிக்கு போகிறார்கள்
மயிலும் அணிலும் பாடம் படிக்கின்றனவா ?
அந்த தெருவோர சோம்பேறி வேப்பமரம் ஒரு முட்டாள்
அதுகூட எவ்வளவு அன்பாக இருக்கிறது
பட்டாம்பூச்சிகள் தூர தூரமாக போகின்றன
மேகங்கள்
நதியிலும் குளத்திலும் மூழ்கி குளிக்கின்றன
யாராவது அவைகளைக் கண்டிக்கிறார்களா ?

அம்மா ....
நான் உனது மகனில்லை
அல்லது நீ எனது தாயில்லை
இதற்குமேல் இப்போது
நான் உன்னிடம் பேசமாட்டேன்

எனது தாயானவள்
உண்மையிலேயே நன்மை விளைவிக்கும்
அந்த சிறு தேவதைதான்.

எனது மேல்சட்டையை, கால்சட்டையை
பள்ளிக்கூட பையை
நான் வீசி எறிவேன்
நீ அதைப் பார்ப்பாய்.

எனது தாய் - அந்த சிறு தேவதை
எனக்காக ஒரு ஜோடி இறக்கைகளைத்
தைக்கச்சொல்லி தையற்காரனைக் கேட்பாள்
அது எனக்கு ஒரு உறுதியான குருட்டு செருக்கைத் தரும்
மணியோசையோடு படிக்க
நான் பள்ளிக்குப் போக வேண்டியதில்லை
ஆனால் தொல்லையின்றி
குளத்தில் குளிப்பேன்
ஒரு கருப்பு திருடனாவேன்;
இரவில் ஆந்தையைப்போல்
மற்றவர்களைப் பயமுறுத்துவேன்
வியக்கும் வகையில் சற்றென்று மறைந்து போவேன்.

அம்மா...
நீ என்னைத் தேடியபடி கேட்பாய்
"ஓ... என் மகன் எங்கே? "
அந்த நேரத்தில் -
நான் தூர தூரமாக பறந்து போயிருப்பேன்
மேகங்களைத் தொட.
முடியுமானால் -
பறந்துகொண்டிருக்கும்போது
சோர்ந்துபோனால்
நான் ஆழ்த்து துயில்வேன்
எனது தாய்,
அந்த சிறு தேவதையின் மடியில்.

                                                            - ரமேஷ் பரேக்

குஜராத்தி மொழியிலிருந்து
ஆங்கிலத்தில் : ராகேஷ் ராவ்

தமிழில் : மகரந்தன்

மொழிபெயர்ப்பு கவிதை