கண்ணாடியில் பட்டுத்திரும்பி ஒளிரும்
சூரிய ஒளிக்கற்றைகளையொத்து
என்னில் பட்டுத்திரும்பும்
உன் பார்வை
தட்டமாலைச் சுத்திப்போகும்
கிளர்ந்த ஹார்மோன்களை
பரிசுத்தமாய்
பளபளப்பாக்குகிறது.
உன் வீட்டு முற்றத்து
தூண்களுக்கடியில்
சிந்திக்கிடக்குமென்
இரத்த நாளங்களின்
மர்மமான கூவல்களை
மொழிபெயர்க்காது
சிதை பீடமேற்றுகிறது
தெருக்களைச் சிதைத்துவிட்ட
காலடிச் சத்தங்களின் பேருரை.
வாலைக் குழைத்து
வாஞ்சை காட்டும்
மனநாயின்
சங்கிலியை அவிழ்த்துவிட்டு
துரத்தியடிக்கிறது
வீதிகளை இணைக்கும்
வீடுகளின் புரளி.
இருத்தலுக்கும் தொலைதலுக்குமான
மெளனத்தில்
சூன்யக்காரத்தனத்தின்
அத்தனைச் சடங்குகளையும்
நிகழ்த்திவிட்டுப் போகிறது
வெள்ளிக் குண்டுமணி
சிந்தும் சிரிப்பொலி.
கற்றுத் தரப்படாத நாட்டுடமை
காப்பியங்களில்
புராணங்களில்
சிற்பங்களில்
சுவரோவியங்களில்
அப்பட்டமாய் அப்படியே
இருந்துவிட்டிப் போகட்டும்
உன்னைப் போலவே.
தொடர்ந்து. . .
உன் குரலில்
நான்
பேசிக்கொண்டே இருக்கிறேன்.
~ மகரந்தன்
உன் பெயரெழுதிய
பதாகையை உயர்த்திப்பிடித்தபடி
ஊளையிடும்
நரிகளுக்கு அஞ்சி
ஒரு மயில்மீதேறிப் போனது
உயிர் கொளுத்துமொரு
அந்திப்பொழுது.
ஒரு காவியக் கவிதையை
மீட்டெடுக்கும் தருணம்
நகரமெங்கும்
நிர்வாணம் தரித்து
மதச்சின்னமாகிப்போன
கிறித்துவம் அறையப்பட்ட மரங்களை
வெட்டிச் சாய்க்கிறது
பொறியில் அடைக்கப்பட்ட
ஒற்றைக் காதலை
காவல் காக்கும் ஒட்டுரகப் பூனை.
எரிவதும்
கனன்று புகைவதுமான
கோபத்தை
மேலும் மேலும்
ஆழமும் விசாலமுமாக்கி
மேலும் வேகும்படி செய்கிறது
கந்தகத்தீ கொளுத்தும்
ஆரக்கால் தூபம்.
ஓடுபாதையின்
ஒழுக்கக் கோட்டிற்குள்
ஓடி ஓய்வெடுக்கிறது
கூர்மதியுடன்
அர்த்தமாய் வம்பளந்த
ஞானத்தின் நிச்சலனம்
சுயத்தின் விளிம்பில் சயனித்தபடி.
அத்தனை-
அர்த்தமான வம்பளப்பில்
எதுவுமே மிச்சமில்லாத
துருபிடித்த மோனத்தின்மீது
பீலியின் இறகொன்று
மீண்டும் வந்தமரும்போது
எத்தனை இனிமையாய் இருக்கிறது
இதயம் பேசும் பொய்.
- மகரந்தன்
வாசிக்க மறந்த கதை
கருணைக் கண்கொண்டு
இன்றிரவை வழிநடத்துகிறது
தொலைந்துபோன
திறவுகோலைத் தேடித்தேடி
உறக்கமிழந்த
நடுத்தரவாசியின்
வெப்பமூச்சுக்காற்று.
பருவத்திற்கு பருவம்
மாறுபாடுகொள்ளும்
புனிதங்களிலும் புனிதம்
இருளைத் திறக்குமந்த
திறவுகோல்.
காணாமல் போனதற்கு
அஞ்சலி செலுத்த நினைக்கையில்
எதிர்வந்து நிற்கிறது
என்றோ செலுத்திய அஞ்சலிக்கு
எதிர்ப்பதமாய்
மங்கிப்போன நினைவலைகளில்
சிறு ஒளிக்கீற்றாய்
மற்றொரு பழைய திறவுகோல்
வாசிக்க மறந்த பொழுதுகளை
நேர்நிறுத்தி.
இப்போது-
இரவை வழிநடத்துகிறது
வெறுமையின் துணுக்குகளால்
நிரப்பப்பட்ட
முட்டைகளை அடைகாக்கும்
உறக்கமிழந்த
நடுத்தரவாசியின்
உயர் அழுத்த
வெப்ப மூச்சுக் காற்று
தன் கதையையும்
தனக்கான கதையையும்
வாசிக்கத் திராணியற்று.
- மகரந்தன்
கனத்துச் சிவந்த
ஆழ்ந்த கோடுகளாய்
எவரெவர்மீதோ
விழுந்திருக்க வேண்டிய
சாட்டை வரிகள்
அற்பச்சொல் செதுக்கும்
எழுத்துச் செங்கோல்
கிறுக்கிக் கிறுக்கி
கீறிக்கிழித்த
வெள்ளைத்தாளின்
அகமெங்கும்
புறமெங்கும்.
வெட்கிமுடியாமல்
வேதனையில் இயலாமல்
மௌனமாய்
மரித்துப்போயிருக்க வேண்டும்
அந்த -
அநாமதேய வெள்ளைத்தாள்
ஒரு வார்த்தையும்
ஏற்கமுடியாமல்.
செத்த வார்த்தைகளை
அலங்கரித்து மேடையேற்றும்
பராரிகளைத் தேடி
உபரியாய் உதிர்கின்றன.
இசங்களையும்
இயக்கங்களையும்
இயக்கும் வார்த்தைகள்.
செங்கோலின் முனை
வீங்கிக்கிடக்கிறது
அவ்வழியேகுவோர்
காறித் துப்பிய
எச்சிலில்.
- மகரந்தன்