Saturday, March 6, 2010

ஒரு மொந்தைக் கள்ளும் கொஞ்சம் கோழிக்கறியும்

இணைக்க
ஒரு மொந்தைக் கள்ளும்
கொஞ்சம் கோழிக்கறியும் 

கேள்விக்குறிகளால் 
கேள்விக்குறிகளால் 
நிரப்பப்பட்டிருக்கிறது 
அரங்கமேடை.

வெறிபிடித்த யோனியை 
வேட்டைக்கு அழைக்கும்
உடல்மொழி பீறிடும் ஓரங்கம் 
தெளிவற்று அசைகிறது.

கால மாத்திரைகளின்
கனவிலும் செலவிலும் 
மறைமுகமானது 
நிருத்தம், நிருத்தியம்.

கேள்விக்குறிகளை ஒத்த 
கோமாளிகளின் வலி
நாலுகால் கிடக்கைகளின் 
இதயத்தை ஈர்க்கவில்லைபோலும்.

குவிமைய விளக்குகளின்
வெளிச்சத்தில் 
உணர்ச்சியற்று கிடக்கின்றன 
உணர்ச்சிக்குறிகள்.

வேட்கைகளை 
வெளியேற்றித் தணியா 
அடல்மொழிகளின் வெளியேற்றம் 
"பொட்டப்பயலே... போடா...
குத்துற குத்துல 
கொட்டப் பிதுங்கிடும்" 

மேற்கோள்கள்
உதாரணங்கள் 
உபதேசங்கள் எதுவும் 
சமன்பாட்டை நோக்கி 
நீளவில்லையென 
மர்மங்கள் நிறைந்தத் தேடலின் 
ஒரு பகுதியாக 
அறிவிப்புகள் 
வெளிநடப்புகள்
அத்துமீறும் கோஷங்களின் 
நடுச்சாலை ஆர்ப்பாட்டங்கள்.

அந்தந்த நிமிடத்தை 
முடிவு செய்கிறது 
இயக்க விதியை 
இயக்கும் சப்தங்கள். 

வெளிப்பட்டுத் தோன்றா 
உயிராட்டத்தில் 
புகலிடம் தேடி 
அரங்கமெங்கும் அலைகின்றன 
கேள்விக்குறிகள்.

கசிகிறது 
ஆங்கங்கே நிற்கும் 
கங்காணிகளின் ரகசியப் பேச்சு 
உருபெருக்கி ஊடாக
". . . கழுதைமேல ஏறித்தான் என்னா சொகம்
எறங்கித்தான் என்னா சொகம் ?"

". . . வெஷத்த வெச்சித்தான் 
கொல்லனும்னு இல்ல 
வெல்லத்த வேச்செக்குட 
கொன்னுப்புடலாம் " 

சப்தங்களைத் தின்று 
ஈகோவில் இயங்கும் 
உலகிற்குள் பிரவேசிக்க 
பார்வையாளர்களே 
தினசரி வாருங்கள்.

- இன்னும் 
மிச்சமிருக்கின்றன 
இருக்கைகளும் 
கேள்விக்குறிகளும். 
 
- மகரந்தன் 
  
 


Wednesday, February 24, 2010

பெயர்சுட்டலாகாது

இணைக்க
நேரிழையாக
நேர்ந்துவிடாத
பழைய நினைவுகளின் தொகுப்பில்
எதிர்பார்ப்புகளின்
அகவிழித்திரையிலிருந்து நீள்கிறது
அவர்களின்
ராஜபாட்டை.

ஆட்டக்கதைகளின்
கட்டுமானப் பாத்திரங்களில்
கண்ணுக்கெட்டாத
மர்மங்களில்
மெல்லக்கரைந்து கொண்டிருக்கிறது
தாங்கும் பாதைகளும்
சுமக்கும் பல்லக்குகளும்.

காதலுக்குமுன் வரும்
கனவுபோல்
வியூகம்
மிக எளிதாய் இருக்கிறது
"மலஜலம்" கழிப்பதற்கு
தனிவாழ்விலும்
பொதுவாழ்விலும்.

பெயர் சுட்டலாகாது
தனிநபர் சாதனைகள்
அதிகாரத்தின் கருணைக்கொடை.

- மகரந்தன்


Tuesday, February 23, 2010

சொரணையுள்ள சுடுகாட்டுப் பிணங்கள்

இணைக்க
கேட்பாரற்று
குப்புறக்கிடக்கும்
பேய் இரைச்சலில்
சிகரெட்டின் முனைதவிர்த்த
இடங்கள் அனைத்திலும்
அடர்ந்துகிடக்கிறது
கருப்பு.

ஓயாமல் பேசும் வாய்
பதில் கதவைத் திறக்காமல்
சொற்களைப் பிணமாய்
இருத்தி வைத்திருக்கிறது.

கூட்டம் கூட்டமாக
தனியாக
வரிசையாக
இணைந்து
முன்னேமுன்னேவென்று
புகை அப்பிய
வானத்தை நோக்கி
உணர்ச்சியற்று
உட்கார்ந்திருக்கிறது
எதிர்காலம் குறித்த
ஒற்றைச் சம்பவம்

"என்ன ஒரேமுட்டா யோசனை ?"
"முப்பாட்டனை நெனைச்சிக்கிட்டிருந்தேன்"

கனன்றுகொண்டிருக்கிறது
கருஞ்சுருட்டு முனையின் கங்கு
வெளிச்சத்தின் எல்லைதொட்டு.

எரிதழல் கேட்கிறது
சொரணையுள்ள
சுடுகாட்டுப் பிணங்கள்.

- மகரந்தன்

Monday, December 28, 2009

படுக்கையில் கிடக்கும் நாற்காலியின் நாவு

இணைக்க
ஓயாது ஓடி 
நாட்களைக் கடத்தும் 
கடிகாரக் கரணம் 
நின்றுபோகக்கடவது.  


சுயசரிதம் எழுதியபடி 
ஆடும் நாற்காலியின்கீழ் 
சூக்குமம் துறந்து 
ஸ்தூலமாகி 
சலனத்தைப் பெருக்கும் 
பொதுப்புத்தியின் 
அடையாளம் காணாத காத்திருப்புகள்.  
நிறமிழந்து அலையும் 
போதையூட்டும் 
சாம்ராஜ்யங்களின் அசிரத்தையால் 
பற்களை இழந்து 
மூத்திரச் சகதியில் 
நெளிந்தபடியே ஊரும் 
சலித்த புன்னகைகள்.  


ஆர்ப்பரித்து அடங்கும் நீலம் 
குதூகளிக்கும் பச்சை 
ஆரூடம் சொல்லும் மஞ்சள் 
நியாயம் பேசும் சிவப்பு 
எதையும் ஏற்கும் வெள்ளை 
சூன்யம் முளைக்கும் கருப்பு  


வண்ணங்களால் 
வண்ணங்களாய் ஒன்றாது 
ஓயாது ஓடி 
நாட்களைக் கடத்தும் 
காலப்பிரக்ஞையற்ற 
கடிகாரக்கரணம் 
நின்றுபோகக்கடவது.  
 
- மகரந்தன்


Friday, November 6, 2009

புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

இணைக்க

புணர்தலும்
புணர்தல் நிமித்தமுமாய்
அவர்கள் தங்கியிருந்தக் கூடாரம்
அவர்களைத்
தாங்கக் கூடாததாயிற்று.

உள்முக‌
தீர்க்கதரிசிகளும்
ஆச்சாரியர்களும்
மாயக்காரர்களாயிருந்தபடியால்
கழுதையின்மேல் சேணம் வைத்து
நகர்வலம் போகிறது
அழுக்கு.

பேச்சுத்துணைக்கு ஆதரவரற்று
தனித்துக்கிடக்கும்
ஒலிவாங்கியின்
வாய்களில் மாட்டிக்கொண்டு
போக்கிடமற்று நெளிகின்றன‌
பாவப்பட்ட புழுக்கள்.

நேர்மையீனமாக்கப்பட்ட‌
சமனில்
யார் ஆசையையும்
பிரதிபலிக்காது
புளகாங்கிதமடைகிறது
விபச்சாரக்காரர்களால்
நிறைந்திருக்கும்
சாப‌த்தினால் நிர‌ப்ப‌ப்ப‌ட்டிருக்கும்
தேக‌ம்.

‍‍‍ -ம‌க‌ரந்த‌ன்

Tuesday, October 27, 2009

உன் குரலில் பேசுகிறேன்

இணைக்க
கண்ணாடியில் பட்டுத்திரும்பி ஒளிரும் 
சூரிய ஒளிக்கற்றைகளையொத்து 
என்னில் பட்டுத்திரும்பும் 
உன் பார்வை 
தட்டமாலைச் சுத்திப்போகும் 
கிளர்ந்த ஹார்மோன்களை 
பரிசுத்தமாய் 
பளபளப்பாக்குகிறது.  


உன் வீட்டு முற்றத்து 
தூண்களுக்கடியில் 
சிந்திக்கிடக்குமென் 
இரத்த நாளங்களின் 
மர்மமான கூவல்களை 
மொழிபெயர்க்காது 
சிதை பீடமேற்றுகிறது 
தெருக்களைச் சிதைத்துவிட்ட‌ 
காலடிச் சத்தங்களின் பேருரை.  


வாலைக் குழைத்து 
வாஞ்சை காட்டும் 
மனநாயின் 
சங்கிலியை அவிழ்த்துவிட்டு 
துரத்தியடிக்கிறது 
வீதிகளை இணைக்கும் 
வீடுகளின் புரளி.  


இருத்தலுக்கும் தொலைதலுக்குமான‌ 
மெளனத்தில் 
சூன்யக்காரத்தனத்தின் 
அத்தனைச் சடங்குகளையும் 
நிகழ்த்திவிட்டுப் போகிறது 
வெள்ளிக் குண்டுமணி 
சிந்தும் சிரிப்பொலி.  


கற்றுத் தரப்படாத நாட்டுடமை 
காப்பியங்களில் 
புராணங்களில் 
சிற்பங்களில் 
சுவரோவியங்களில் 
அப்பட்டமாய் அப்படியே 
இருந்துவிட்டிப் போகட்டும் 
உன்னைப் போலவே.  


தொடர்ந்து. . .  
உன் குரலில் 
நான்
பேசிக்கொண்டே இருக்கிறேன்.  


~ மகரந்தன்

Wednesday, October 7, 2009

மூன்றாம் வருகை

இணைக்க
உன் பெயரெழுதிய 
பதாகையை உயர்த்திப்பிடித்தபடி 
ஊளையிடும் 
நரிகளுக்கு அஞ்சி 
ஒரு மயில்மீதேறிப் போனது 
உயிர் கொளுத்துமொரு 
அந்திப்பொழுது.  


ஒரு காவியக் கவிதையை 
மீட்டெடுக்கும் தருணம் 
நகரமெங்கும் 
நிர்வாணம் தரித்து 
மதச்சின்னமாகிப்போன 
கிறித்துவம் அறையப்பட்ட மரங்களை 
வெட்டிச் சாய்க்கிறது 
பொறியில் அடைக்கப்பட்ட 
ஒற்றைக் காதலை 
காவல் காக்கும் ஒட்டுரகப் பூனை.  


எரிவதும் 
கனன்று புகைவதுமான 
கோபத்தை 
மேலும் மேலும் 
ஆழமும் விசாலமுமாக்கி 
மேலும் வேகும்படி செய்கிறது 
கந்தகத்தீ கொளுத்தும் 
ஆரக்கால் தூபம்.  


ஓடுபாதையின் 
ஒழுக்கக் கோட்டிற்குள் 
ஓடி ஓய்வெடுக்கிறது 
கூர்மதியுடன் 
அர்த்தமாய் வம்பளந்த 
ஞானத்தின் நிச்சலனம் 
சுயத்தின் விளிம்பில் சயனித்தபடி.  


அத்தனை- 
அர்த்தமான வம்பளப்பில் 
எதுவுமே மிச்சமில்லாத 
துருபிடித்த மோனத்தின்மீது 
பீலியின் இறகொன்று 
மீண்டும் வந்தமரும்போது 
எத்தனை இனிமையாய் இருக்கிறது 
இதயம் பேசும் பொய்.  


- மகரந்தன்

Monday, October 5, 2009

வாசிக்க மறந்த கதை

இணைக்க


வாசிக்க மறந்த கதை

கருணைக் கண்கொண்டு 
இன்றிரவை வழிநடத்துகிறது 
தொலைந்துபோன 
திறவுகோலைத் தேடித்தேடி 
உறக்கமிழந்த 
நடுத்தரவாசியின் 
வெப்பமூச்சுக்காற்று.  


பருவத்திற்கு பருவம் 
மாறுபாடுகொள்ளும் 
புனிதங்களிலும் புனிதம் 
இருளைத் திறக்குமந்த 
திறவுகோல்.  


காணாமல் போனதற்கு 
அஞ்சலி செலுத்த நினைக்கையில் 
எதிர்வந்து நிற்கிறது 
என்றோ செலுத்திய அஞ்சலிக்கு 
எதிர்ப்பதமாய் 
மங்கிப்போன நினைவலைகளில் 
சிறு ஒளிக்கீற்றாய் 
மற்றொரு பழைய திறவுகோல் 
வாசிக்க மறந்த பொழுதுகளை 
நேர்நிறுத்தி.  


இப்போது- 
இரவை வழிநடத்துகிறது 
வெறுமையின் துணுக்குகளால் 
நிரப்பப்பட்ட 
முட்டைகளை அடைகாக்கும் 
உறக்கமிழந்த
நடுத்தரவாசியின் 
உயர் அழுத்த
வெப்ப மூச்சுக் காற்று 
தன் கதையையும் 
தனக்கான கதையையும் 
வாசிக்கத் திராணியற்று.  


- மகரந்தன்

Sunday, October 4, 2009

உபரி வார்த்தைகள்

இணைக்க



கனத்துச் சிவந்த
ஆழ்ந்த கோடுகளாய்
எவரெவர்மீதோ
விழுந்திருக்க வேண்டிய
சாட்டை வரிகள்
அற்பச்சொல் செதுக்கும்
எழுத்துச் செங்கோல்
கிறுக்கிக் கிறுக்கி
கீறிக்கிழித்த
வெள்ளைத்தாளின்
அகமெங்கும்
புறமெங்கும்.


வெட்கிமுடியாமல்
வேதனையில் இயலாமல்
மௌனமாய்
மரித்துப்போயிருக்க வேண்டும்
அந்த -
அநாமதேய வெள்ளைத்தாள்
ஒரு வார்த்தையும்
ஏற்கமுடியாமல்.


செத்த வார்த்தைகளை
அலங்கரித்து மேடையேற்றும்
பராரிகளைத் தேடி
உபரியாய் உதிர்கின்றன.
இசங்களையும்
இயக்கங்களையும்
இயக்கும் வார்த்தைகள்.


செங்கோலின் முனை
வீங்கிக்கிடக்கிறது
அவ்வழியேகுவோர்
காறித் துப்பிய
எச்சிலில்.


- மகரந்தன்