இரவு நெறிகள்
மரணம் -
தொங்கிக் கொண்டிருக்கிறது கனமாக
துர்நாற்றமெடுக்கும் இரவின் காற்றில்.
அது வீசுகிறது
வெள்ளை நடைபாதையான
எனது எலும்புகளின் ஊடாக.
சுருள் படிக்கட்டுகளான
எனது முதுகெலும்பில்
அதன் அழுத்தமான காலடிகள் ஏறும்போது,
அதன் அமைதி,
எனது இரத்தக்கதவுகளைச்
சன்னமாகத் தட்டுவதை
நான் கேட்கமுடியுமா ?
அல்லது -
மின்னும் கூர்மையான கட்டாரியின் முனையால்
அறுபடும் இடைவெளியில்
அதிரும் இரவின் சதைபோல்
அது கீழிறங்கி வருமா ?
வாழ்வென்பது
ஒரு தனிப்பறவை
உடற்கூண்டிற்குள் மாட்டிக்கொள்வது.
நிலவின் விழிப்பான விழிகள்
நான் எங்கு சென்றாலும் பின்தொடர்கிறது.
மேலும் -
எனது வீட்டுமுற்றத்தில்
திமிர்த்த மரங்கள்
எதிர்த்து நிற்கின்றன
முகமுடி அணிந்த தீவிரவாதிகள்
என்னை நோக்கி
அவர்களது துப்பாக்கி முனையை நீட்டியிருப்பதைப் போல்
ஆங்கில மூலம் : துர்கா பிரசாத் பாண்டே
தமிழில் : மகரந்தன்
No comments:
Post a Comment