காற்றிழந்த காலம்
ஒரு புத்தகத்தில்
பதுக்கி வைக்கப்பட்டிருந்தது
வெடித்த பலூன் ஒன்று.
யார் வைத்திருப்பார்கள்?
அந்த பலூனின்
நகக் காலில் அச்சிடப்பட்டிருந்த
வாசகத்தைப்பார்த்தேன்
“பிறந்தநாள் வாழ்த்துக்கள்”
ஒரு வயது குழந்தைக்காகச்
சொல்லப்பட்டிருந்தது.
அந்தக் குழந்தை
நீண்ட காலத்திற்கு
குழந்தையாக இருக்க முடியாது.
அந்தக் குழந்தை
இப்போது தனது குழந்தைக்கு
ஒரு பலூனைப் பரிசளித்திருக்கலாம்
அது எந்த புத்தகத்தில்
பதுக்கப்பட்டிருக்கிறதோ !
எப்படியாகினும்
ஒரு மகிழ்ச்சியான தருணம்
கடந்து போய்விட்டதை
நினைவுக்கு கொண்டுவந்துவிட்டது
ஒரு வெடித்த பலூன்.
ஒரு வெடிச்சிரிப்பை
சட்டென்று நிறுத்துவது எப்படி?- மகரந்தன்